

சமையலில் சில நுணுக்கங்களை தெரிந்து வைத்திருந்தால் சமைப்பது கடினமாக இருக்காது அதற்கான குறிப்புகள் இதோ:
கபாப் ஒவ்வொரு சமயம் கபாப் எப்படி செய்தாலும் பைண்டிங் இல்லாமல் இருக்கும். அப்போது இரண்டு ஸ்லைஸ் பிரட்டை எடுத்து நனைத்து கலந்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும்.
பீட்ரூட்டில் அல்வா, பூரி, பாயாசம் போன்றவை செய்யும் முன் பீட்ரூட்டை வினிகரில் முக்கி எடுத்து நீரை வடிகட்டி நறுக்கினால் சிவப்பு நிறம் மாறாமல் இருக்கும்.
நூடுல்ஸ் செய்துவிட்டு வடித்த நீரில் ஒரு தக்காளி பழத்தை பிழிந்து விட்டு ஒரு பச்சை மிளகாய் கீறி போட்டு கால் ஸ்பூன் சீரகம் மிளகு தட்டிப் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சூப் தயார்.
எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதனுடன் இட்லியை துண்டாக்கி எண்ணெயில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
முறுக்கு மற்றும் அதன் துகள்கள் மீந்துவிட்டால் நன்கு உடைத்து பொடி செய்து காய்கறிகள் சமைக்கும்போது மேலாக தூவி பரிமாறலாம்.
முட்டைக்கோஸ் பொரியல் செய்யும்பொழுது வேகவைத்த கருப்பு சுண்டல் கைப்பிடி அளவு சேர்த்து இஞ்சி துருவல் தேங்காய் துருவலுடன் நன்கு புரட்டி எடுக்க சுவை அள்ளும்.
சில சமயம் கடாயில் பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெயில் தண்ணீர் பட்டுவிடும். அப்பொழுது ஒரு துண்டு வாழை இலையைப் போட்டு வைத்தால் எண்ணெய் வெடிப்பது குறையும்.
சில நேரங்களில் குழம்பு, சாம்பார் போன்றவற்றில் உப்பை அதிகமாகப் போட்டுவிடுவோம். அப்பொழுது பப்பாளிக்காயைத் துண்டுகளாக நறுக்கிப்போட்டால் அவை உப்பை உறிஞ்சிவிடும்.
வாடிப் போன கொத்தமல்லித் தழையை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
தோசைக்கு பச்சரிசி பயன்படுத்தினால் அதை சிறிது வறுத்து வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் தோசை மெத் என்று இருக்கும்.
சில சமயம் செப்பரேட்டர் இல்லாமல் சாதத்தை நேரடியாக குக்கரில் வைக்கும் பொழுது குக்கரின் வெளியே அதிகமான சாதம் வடிந்து வந்துவிடும் .அந்த சாதத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி உருட்டி அதனை உலர்த்தி பின்பு பொரித்து சாப்பிடலாமாம்.
அரிசி, பருப்பு வகைகளை நன்றாக ஊறவைத்துவிட்டு சமைத்தால் சீக்கிரமாக வெந்துவிடுவதுடன் கியாஸ் மிச்சமாகும். சாதம் பொலபொலவென்று இருக்கும்.
பாப்கார்ன் செய்யும்போது பாத்திரத்தில் சோளமணிகளோடு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து மூடி போட்டு மூன்று நிமிடம் அதிக வெப்பத்தில் ஓவனில் வைத்து எடுக்கவும். இதேபோல் செய்து கியாஸ் ஸ்டவ்வில் வைத்து எடுக்கலாம். ஆனால் சிம்மில் வைக்கவேண்டும்.
அருமையான வாசனை உள்ள சாக்லேட் செய்ய எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட (Oil base essence) எசன்ஸ் சேர்க்கவேண்டும்.
குறைந்த எண்ணைய்ணயில் வெங்காயத்தை சிவக்க வதக்கும் போது அவை அடி பிடிக்கும். அதற்குபாதி வதங்கியதும் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து வதக்கினால் அடி பிடிக்காமல் வதக்கலாம்.
பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு துண்டு ரொட்டியை போட்டுவிட்டு பின்பு பொரித்த உணவை வைத்தால் உணவு பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு சீவலில் சீவி உப்பு தண்ணீரில் ஊறவிட்டு வடியவிட்டு எடுத்தால் வெள்ளையாக இருக்கும். வேகவைக்கும்போது சிறிது வினிகர் சேர்த்தால் வெளுப்பாக இருக்கும்.