
டெல்லியில் வெந்தயக்கீரை, பாலக், கடுகு கீரை வெகு பிரபலம். அதை கடையல், பராத்தா, மற்ற காய்களுடன் சேர்த்து செய்வது என்று எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்கள். அதுபோல் கர்நாடகாவில் சோம்பு கீரை வெகு பிரசித்தம். இவற்றை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் பிரிட்ஜ் மண மணக்கும். வீடே மணமணத்துப் போகும். ஆனால் சீசனில் கிடைக்கும் இந்தக் கீரையை இங்கு அனைவரும் அக்கிரொட்டியில் இருந்து எல்லா விதமான உணவு பதார்த்தங்களிலும் அளவோடு சேர்த்து பயன்படுத்துகிறார்கள். அதில் ஏகப்பட்ட சத்து இருப்பதால் சீசனில் விடுவதில்லை. அதிலிருந்து பக்கோடா செய்முறையைப் பார்ப்போம்.
சோம்புக் கீரை பக்கோடா
செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு -ஒரு கப்
அரிசி மாவு-3 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக அரிந்த சோம்புக்கீரை- 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் பொடியாக- அரிந்தது ஒன்று
பொடியாக அரிந்த வெஜிடபிள்ஸ் -ஒரு கைப்பிடி அளவு
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ்- இரண்டு டீஸ்பூன்
ஓமம்- அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
மாவுகளுடன் எண்ணெயைத் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பக்கோடா பதத்திற்கு நன்றாக பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் விருப்பப்பட்டபடி பக்கோடாக்களாக கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக டீயுடன் சாப்பிடலாம்.
சோளே சோம்புக் கீரை பராத்தா
செய்யத் தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -ஒரு கப்
வேகவைத்த சோலே- ஒரு கப்
பொடியாக நறுக்கிய சோம்புக் கீரை -ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள்- ஒரு டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி -அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவில் தண்ணீர்,உப்பு சேர்த்து பிசைந்து திரட்டுவதற்கு எதுவாக வைக்கவும். சோலேயை மசித்து அதனுடன் சோம்புக் கீரை, மிளகு சீரகத்தூள் மிளகாய் பொடி அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். பிறகு மாவை சப்பாத்தி ஆக திரட்டி அதற்குள் சோம்புக்கீரை பூரணத்தை வைத்து நன்றாக மூடி தேய்த்து, பரோட்டா தவாவில் போட்டு, எல்லா பக்கமும் நன்றாக வேகவிட்டு தேவையான அளவு எண்ணெய் விட்டு எடுத்து வைக்கவும். இதன் மேலே பட்டர் வைத்து சாப்பிட்டால் போதுமானதாக இருக்கும். ரைத்தா, கெட்டி தயிர் , பச்சடி வகைகள் நல்ல ஜோடி சேரும்.
இன்னும் சிலர் கோதுமை மாவை பிசையும் போது தண்ணீருக்குப் பதிலாக சோம்பு குடிநீரை ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்கிறார்கள்.
மற்றும் சிலர் மீந்துபோன சோம்புக்கீரை சூப்பை மாவில் சேர்த்து பிசைந்தும் ரொட்டி சுடுகிறார்கள்.
அக்கிரொட்டி, தோசை என்று அனைத்திலும் சோம்புக் கீரையை சேர்த்து செய்வது இந்த மாதத்தில் உள்ள ஒரு சிலருடைய வழக்கமாக இருக்கிறது.
இதனால் பல்வேறு விதமான வயிற்றுப் பிரச்னைகள் சரியாவதாக கூறுகிறார்கள்.