
முன்பெல்லாம் விடுமுறை வந்துவிட்டால் வீட்டில் உள்ள பாட்டிமார்கள் தவறாது முறுக்கு, சீடை, ரவா பட்டன் போன்ற பலகாரங்களை செய்து அடுக்கி வைத்து விடுவார்கள். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்து சாப்பிடுவதற்கு இது போன்ற நொறுக்கு தீனிகளை எடுத்துக் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும். இப்பொழுது ரவா பட்டன் செய்முறை விளக்கத்தைப் பற்றி இதோ:
ரவா பட்டன்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா- அரைக்கப்
அரிசி மாவு -கால் கப்
ரவை-ஒரு கப்
வறுத்தரைத்த உளுந்து மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் -முக்கால் கப்
இஞ்சி நறுக்கியது- ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
வர மிளகாய் -4
எள்- ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் -சிட்டிகை
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப.
செய்முறை:
மைதா, அரிசிமாவை வெறும் வாணலியில் வறுக்கவும். தேங்காய் துருவல் இஞ்சி மிளகாய்கள் இவற்றுடன் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் ரவை, மைதா, அரிசி மாவு, உளுத்தமாவு, எள், பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை சிறிய சீடை அளவு உருட்டி கட்டை விரால் நடுவே அமுக்கி தட்டையாக்க வேண்டும். இதே போல மொத்த மாவையும் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். வாயில் போட்டால் கரையும். செய்து அசத்துங்க.
கடலை பருப்பு தேங்காய் லட்டு
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு- ஒரு கப்
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
முந்திரி ஒடித்து வறுத்தது- கைப்பிடி அளவு
நெய்- 200 கிராம்.
செய்முறை:
கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடிக்கவும். அதேபோல் சர்க்கரையும் பொடித்து அதனுடன் கடலைப் பருப்பு மாவு, ஒரே சீரான தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, முந்திரி சேர்த்து கலக்கவும். இதில் நெய்யை சூடாக்கி ஊற்றி சூட்டுடன் உருண்டைகள் பிடிக்கவும். நிமிடங்களில் செய்துவிடலாம்.
கடலைப்பருப்பை கறுக்காமல் வறுக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் கறுகினாலும் சுவை மாறிவிடும். கடலைமாவை நெய்யில் வறுத்து செய்வோம். அதைவிட கடலைப்பருப்பை வறுத்து பொடித்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.