
நமக்கு எளிதாக கிடைக்கும் ஆரோக்கியம் பேணும் உணவுப் பொருட்களில் அதிமுக்கியமானது கீரை வகைகள். தினம் ஒரு கீரை வகையை எந்த வடிவத்திலேனும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்லும் வாய்ப்பு குறையும்.
இதோ நம் வீட்டுத்தோட்டத்தில் மலரும் இரண்டு வகையான கீரை ரெசிபிகள். அதன் பலன்களுடன்.
வெந்தயக்கீரை
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருப்பதால் ஜீரண சக்தியை சீராக்கி சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வை மற்றும் வயிற்று பாதிப்புகளை சரி செய்கின்றது. மலம் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும். இதில் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வெந்தயக்கீரை சாதம்
தேவை:
பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி - 2 கப் வெந்தயக்கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 2
நாட்டு தக்காளி - 4
இஞ்சி - சிறு அங்குலம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - சிறு கப்
எண்ணெய்- 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக்கீரையை மண் போக ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வடிகட்டவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்களை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக அரைக்கவும். தேங்காயைப் பாலெடுத்து வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை போட்டு வதக்கி பொடியாக அரிந்த வெங்காயம், வெந்தயக்கீரை, தக்காளியைப் போட்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
இப்போது தேங்காய் பால் அளந்து அதனுடன் 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் தேவையான உப்பு, அரிசி சேர்த்து நன்கு கிளறி மூடி வேகவிடவும். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி பரிமாறவும். வெந்தயக்கீரை லேசான கசப்புதன்மை கொண்ட எனினும் சாதத்தில் அந்த சுவை தெரியாது. தொட்டுக்க வெள்ளரி தயிர் சூப்பராக இருக்கும்.
சிறுகீரை
சிறுகீரையில் நார்ச்சத்துடன் நிறைந்து உள்ளது, சிறுகீரையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் K, எலும்புகளின் வலிமைக்கு உதவுகின்றன.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் சிறுகீரை குறைந்த கலோரி கொண்டது என்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சிறுகீரை கடைசல் செய்முறை பார்ப்போம்.
சிறுகீரை கடைசல்
தேவை:
சிறுகீரை - 1 சிறிய கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு- 1 சிறிய கப்
நாட்டுத் தக்காளி - 4
சீரகம்- 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப
எண்ணெய் அல்லது நெய் - தாளிக்கவும் தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும் . தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலி அல்லது மண் சட்டியில் நெய் விட்டு சூடானதும் கடுகு,சீரகம் தாளித்து அரைத்த தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரிந்த கீரை, மிளகாய் தூள், வேக வைத்த பருப்பு சேர்த்து வேகவிடவும்.
தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பை சிம்மில் வைத்து கீரை வெந்த பின் இறக்கி மத்து கொண்டு நன்கு கடையவும். மத்தால் கடைய முடியவில்லை எனில் மிக்சியில் வைப்பர் கொண்டு ஒரு சுழற்று சுற்றுலாம். இந்த சிறுகீரை கடைசலை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட சுகமாக இருக்கும்.