பிள்ளைகள் விரும்பும் பிஞ்சு வெள்ளரிக்காய் ரெசிபிகள்!

Cucumber recipes that kids will love!
summer special recipes
Published on

வெயில் காலம் வந்தாலே வெள்ளரிக்காய் சீசனும் வந்துவிடும். பிஞ்சு வெள்ளரியை நன்கு மென்று தின்றாலே தீராத தாகமும் தீரும் என்பார்கள். பல்வேறு மருத்துவ நன்மைகள் தரும் வெள்ளரிக்காயை அன்றாடம் நமது உணவில் பயன்படுத்துவது இந்த வெயிலை சமாளிக்க உதவும்.

வெள்ளரிக்காயில் உள்ள கலோரிகள் நமக்கு எளிதில் பசியைத் தூண்டாது என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் சிறந்தது. அதிகப்படியான உணவுகளை . நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, நாவறட்சியைப் போக்கி சிறுநீர் பிரிவைத் தூண்டுவதோடு இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. சரி வாங்க வெள்ளரிக்காய் ரெசிபிஸ் பார்ப்போம்.

வெள்ளரிப்பிஞ்சு ராய்த்தா

தேவை:
வெள்ளரி பிஞ்சு -4
கெட்டித்தயிர்-  1 கப்
பச்சை மிளகாய்- 1
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
கடுகு கருவேப்பிலை - தாளிக்க எண்ணெய் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெருங்காயம்- சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிது

செய்முறை:

வெள்ளரிப் பிஞ்சுகளை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.  துருவிய தேங்காய் துருவல் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கெட்டி தயிர், உப்புடன் அரைத்த விழுது மற்றும் வெள்ளரிப்பிஞ்சுகளை சேர்த்து கரண்டியில் காயவைத்த எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலையைத் தாளித்து அதில் கொட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இந்த வெள்ளரிக்காய் ராய்த்தாவை அப்படியே சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தந்து கோடை காலத்தில் அவர்களின் வயிற்றை குளிர் படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சீசனுக்கேற்ற மாம்பழ பூரி - உடனடி மாங்கா பிரட்டல் செய்யலாம் வாங்க!
Cucumber recipes that kids will love!

வெள்ளரிப்பிஞ்சு சாலட்

தேவை:
வெள்ளரிப்பிஞ்சு - 4
அரிசி பொரி- 1 கப்
பெரிய வெங்காயம்-  1
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பெங்களூர் தக்காளி - 1
பொடியாக நறுக்கிய குடைமிளகாய்- 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1சிட்டிகை கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் உப்பு, கருவேப்பிலை, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கூடவே நறுக்கிய தக்காளியை  சேர்த்து வதக்கி கடைசியாக குடைமிளகாய் போட்டுக்கிளறி அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே அரிசி பொரியையும் மாங்காயும் சேர்த்துக் கிளறி இறுதியில் நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சையும் கொத்தமல்லித் தழையும் சேர்த்து கலந்து பரிமாறலாம். இதற்கு தேவைப்பட்டால் சாட் பவுடர் அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய் கூட்டு

தேவை:
வெள்ளரிக்காய் - 2
பாசிப்பருப்பு - 4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய்-  1 
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி  - சிறிது
தேங்காய் எண்ணெய் -  1ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன் வரமிளகாய் -1

செய்முறை:

தேங்காய்த்துருவலுடன் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து  மிக்சியில் விழுதாக அரைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய வெள்ளரியையும் சேர்த்து வேகவிடவும். வெள்ளரி சீக்கிரம் வெந்துவிடும். கவனம். பிறகு வேகவைத்த பயத்தம் பருப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைக்கவும். கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய கொத்தமல்லித்தழை  சேர்த்து இறக்கவும்.

இதை சாதத்தில் போட்டு உருக்கிய நெய்விட்டுப்  பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com