கோடைக் காலம் வந்தாலே பள்ளி விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகள், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக உணவு தயாரித்தல் போன்றவை பெரிய சவால்தான்.
அடிக்கிற வெயிலுக்கு தண்ணீர் தவிர எது சாப்பிட்டாலும் ருசிக்காதது போலவே தோன்றும். அடுப்படியில் நிறைய நேரம் செலவிடாமல் அதே சமயம் வாய்க்கு ருசியாக ஒரு துவையல், வத்த குழம்பு, மோர் குழம்பு என்று செய்வதுடன் தயிர் பச்சடி ஒன்றையும் செய்துவிட சாப்பாடு நன்கு இறங்கும், ருசியாகவும் இருக்கும், வேலையும் எளிதில் முடிந்து விடும். தினம் தினம் என்ன விதவிதமான தயிர் பச்சடிகள் செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாமா?
1. வெண்டைக்காய் பச்சடி:
வெண்டைக்காய் 100 கிராம்
கெட்டி தயிர் ஒரு கப்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
பொடி உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
வெண்டைக்காயை கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். தேங்காய் பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து அதிகம் புளிப்பில்லாத தயிரில் கலந்து உப்பு சேர்க்கவும். கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி விடவும். பரிமாறுவதற்கு முன்பு பொரித்த வெண்டைக்காய்களை தயிர் கலவையில் சேர்த்து பரிமாற மிகவும் ருசியான வெண்டைக்காய் பச்சடி தயார். இதனை துவையல் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
2. மாம்பழ பச்சடி:
கெட்டி தயிர் ஒரு கப்
பழுத்த மாம்பழம் 1
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
உப்பு சிறிது
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, நல்லெண்ணெய்
மாம்பழத்தை தோல் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் அதிகம் புளிக்காத தயிரில் மாம்பழத் துண்டுகளை கலந்து உப்பு சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்துக் கொட்ட இனிப்பு புளிப்புடன் சுவையான தயிர் பச்சடி தயார்.
3. ஸ்வீட் கார்ன் பச்சடி:
ஸ்வீட் கான் 1
கெட்டி தயிர் ஒரு கப்
பூண்டு ஒரு பல்
உப்பு தேவையானது
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
சோளத்தை உதிர்த்து இரண்டு நிமிடம் வாணலியில் ஒரு கை தண்ணீர் தெளித்து வேக விடவும். தேங்காய், பச்சை மிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைக்கவும். பூண்டை நசுக்கி கொள்ளவும். அதிகம் புளிப்பில்லாத தயிரில் ஸ்வீட் கான் தேங்காய் அரைத்தது உப்பு, சர்க்கரை, நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கலந்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
4. குடமிளகாய் பச்சடி:
குடமிளகாய் ஒன்று
சின்ன வெங்காயம் 6
தக்காளி ஒன்று
கெட்டித் தயிர் ஒரு கப்
தேங்காய் சிறிது
பச்சை மிளகாய் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க :கடுகு
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
குடைமிளகாயை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கவும். தேங்காய், மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கெட்டி தயிரில் தேங்காய் பச்சை மிளகாய் அரைத்த விழுது, உப்பு, நறுக்கிய காய்கள் சேர்த்து கலந்து கடுகு தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான குடைமிளகாய் பச்சடி தயார்.
5. அன்னாசிப்பழ பச்சடி:
அன்னாசி பழ துண்டுகள் ஒரு கப்
தயிர் ஒரு கப்
சர்க்கரை ஒரு ஸ்பூன்
உப்பு அரை ஸ்பூன்
தேங்காய் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
சீரகம் 1/2 ஸ்பூன்
கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன்
அன்னாசி பழத்தை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் மிளகாய் சீரகம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அன்னாசி பழத்துடன் அதிகம் புளிப்பில்லாத தயிர் சேர்த்து, சர்க்கரையும் உப்பும் போட்டு குறைந்த தீயில் வேக விடவும். அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கான்பிளவர் மாவை அரை கப் நீரில் கரைத்து கொதிக்க விட்டு இறக்கவும். அனைவருக்கும் பிடித்தமான அன்னாசி பழக பச்சடி தயார்.
6. இஞ்சி பச்சடி:
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 1
உப்பு தேவையானது
வெல்லம் சிறு துண்டு
தயிர் 1 கப்
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன் கொத்தமல்லி சிறிது
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம்
இஞ்சியை தோல் நீக்கி பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். அதிகம் புளிப்பில்லாத கெட்டி தயிரில் அரைத்த விழுதை சேர்த்து தேவையான உப்பு, ஒரு துண்டு வெல்லம், பெருங்காயத்தூள்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கடுகு கருவேப்பிலையை தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான இஞ்சி பச்சடி தயார்.