Drug-GPT: மருந்துகளைப் பரிந்துரைக்கும் AI கருவி! மருத்துவத்துறையில் ஒரு புரட்சி!

Drug-GPT
Drug-GPT

Oxford பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள Drug-GPT என்ற புதிய AI கருவி, மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அவற்றை நிர்வகிக்கவும், நோயாளிகள் மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்களுக்குத் தெரியப்படுத்தவும் தகவல்களை வழங்குகிறது. மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அல்லது பிற சுகாதார நிபுணர்கள் நோயாளியின் நிலைமைகளை இந்தக் கருவியில் உள்ளிடுவது மூலமாக, சரியான மருந்துகளைத் தேர்வு செய்ய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி, சரியான மருந்துகளைதான் பரிந்துரைக்கிறோமா என்பதை மருத்துவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Drug-GPT வெறும் மருந்துகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல், அவற்றை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யார் யாருக்கு பயன்படுத்த வேண்டும்? என்று அனைத்தையும் விளக்கிக் கூறுகிறது. இந்தக் கருவியை உருவாக்கும் திட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AI For Healthcare ஆய்வகத்தின் குழு வழிநடத்தியது.

இதன் தேவை என்ன?

பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 237 மில்லியன் மருந்துப் பரிந்துரைப் பிழைகள் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 98 மில்லியன் யூரோ நஷ்டமாவது மட்டுமின்றி, 1700க்கும் அதிகமான உயிர்களும் பறிபோகின்றன. இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கும் விதமாகவே Drug-GPT உருவாக்கப்பட்டுள்ளது.

Drug-GPT உருவாக்கும் தகவல்களின் அடிப்படையில் சரியான மருந்துகளைத் தேர்வு செய்து, அதன் சாதக பாதக விளைவுகளை நோயாளிகளுக்குத் தெரியப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலமாக நோயாளிகளால் மருந்துகள் தவறாக எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு, மருந்துகள் சரியானபடி வேலை செய்ய அதிக வாய்ப்பும் ஏற்படுகிறது.

இருப்பினும் இத்தகைய கருவிகள் தவறான தகவல்களை வழங்கினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் காரணமாக, உலகளாவிய மருத்துவ சங்கங்களால் இந்த AI இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இத்தகைய கருவிகளால் எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்த Drug-GPT தொழில்நுட்பத்தின் பயன்பாடு எவ்வாறு இருக்கும்? இதனால் மருத்துவர்களுக்கு பயனா? பிராப்ளமா? இதனால் மருத்துவர்கள் – நோயாளிகள் இடையே ஆன மனரீதியிலான உறவு பாதிக்கப்படுமா?

தலை மற்றும் கழுத்துப் பகுதிகளின் புற்றுநோய் சிகிச்சைக்கான ஆலோசகர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மூத்த மருத்துவர் டாக்டர். நாராயணா சுப்பிரமணியம் சொல்வதைப் பார்ப்போம்:

Dr. Narayana Subramaniam
Dr. Narayana Subramaniam

“செயற்கை நுண்ணறிவு மனிதப்பிழையைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க அல்லது மருத்துவர்கள் மிகுந்த சோர்வடையும்போது அல்லது அறிமுகம் இல்லாத அரிய மருந்துகளை அவர்கள் கையாள நேரிடும்போது பெரிதளவில் உதவும். ஆனால், இந்தத் தொழில்நுட்பங்களை அங்கீகரிப்பதற்கு முன் நன்றாக சோதித்துப் பார்ப்பது அவசியம். மற்றும் அதன் துல்லியத்தன்மையைச் சரிபார்ப்பது முக்கியமானது. ஏனெனில் இவற்றில் ஏற்படும் பிழைகள் நோயாளியின் பாதுகாப்பைப் பாதிக்கும்.

இந்தத் தொழில்நுட்பத்தை சரியான முறையில் ஏற்றுக்கொள்வது மருத்துவர்களின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான சுமையை (Cognitive Burden) குறைக்கலாம். மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் மருத்துவச் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தி, பாதுகாப்பினை உயர்த்தி, பக்க விளைவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்து, மருத்துவ மேலாண்மையை மேம்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
Mumps: பொன்னுக்கு வீங்கி என்றால் என்ன தெரியுமா? கோடை காலத்தில் குழந்தைகள் ஜாக்கிரதை! 
Drug-GPT

இத்தகைய தொழில்நுட்பங்களால் மருத்துவர்கள் தங்களின் வழக்கமான நடைமுறையிலிருந்து விலகுவதுபோல தோன்றினாலும், இந்தப் பயன்பாடுகள் வெறும் Interactive கருவிகள் மட்டுமே. Drug-GPT என்பது மருத்துவர்கள் உடனடியாக பெரிய அளவிலான தரமான தகவல்களைப் பெற அனுமதிக்கிறது. முன்னதாக மருத்துவர்கள் இத்தகைய தகவல்களைப் பெற பல புத்தகங்கள் அல்லது கட்டுரைகளில் தேட வேண்டும். ஆனால் Generative செயற்கை நுண்ணறிவு எளிய கேள்விகளைக் கேட்டு இத்தகைய சிக்கலான தகவல்களைத் தெரிந்துகொள்ள மருத்துவர்களை அனுமதிக்கிறது.”

சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மூத்த மருத்துவர் டாக்டர். ராகவ் சுந்தர் சொல்வது என்ன?

Dr. Raghav Sundar
Dr. Raghav Sundar

“AI will not replace doctors. Doctors who use AI will replace doctors who don't use AI.”

“Drug GPT என்னும் AI (செயற்கை நுண்ணறிவு) மருத்துவர்களை மீறி செயல்படாது. மருத்துவர்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும். ஆனால், செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளை உபயோகப்படுத்தாத மருத்துவர்கள் காணாமல் போவார்கள். செயற்கை நுண்ணறிவினை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடையும் மருத்துவர்கள், காலத்திற்கேற்றவாறு தங்களை மேம்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள், வேரூன்றி இருப்பார்கள்.”

எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்,

AI என்பவர் நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com