தால் சாபுதானாவும், நேந்திர சிப்சும்!

healthy snacks
healthy snacksImage credit - youtube.com
Published on

மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டிதான் தால் சாபுதானா. சாபுதானாவில் எது செய்தாலும் எளிதில் ஜீரணமாகக் கூடியது மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த உணவுகள் ஏற்புடையதாக இருக்கும். தொடுகறி என்று விசேஷமாக செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. சத்துக்கள் நிறைந்த சாபுதானா செய்முறை பற்றி பார்ப்போம். 

தால் சாபுதானா:

தேவையான பொருட்கள்:

சாபுதானா என்கிற ஜவ்வரிசி- ஒரு கப்

சிறு பருப்பு -முக்கால் கப்

பெரிய வெங்காயம் நறுக்கியது- ஒன்று 

பச்சை மிளகாய் -3

தக்காளி -ஒன்று நறுக்கியது

மல்லித்தழை ,கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது- ஒரு கைப்பிடி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

மஞ்சள் பொடி -சிறிதளவு

செய்முறை:

ஜவ்வரிசியில் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து விடவேண்டும். சிறு பருப்பிலும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து விட வேண்டும். 

அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயத்தை வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்.  கூடவே ஊற வைத்த ஜவ்வரிசி மற்றும் சிறுபருப்பையும் சேர்த்து கிளற, ஏற்கனவே ஊறி இருந்ததால் நன்றாக வெந்துவிடும். கலருக்கு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் மல்லித்தழை, கருவேப்பிலையை போட்டு நன்றாக புரட்டி உப்பு பார்த்து எடுத்து  பரிமாறவும் . இதை அப்படியே சாப்பிடலாம் விருப்பப்பட்ட சட்னி உடனும் சேர்த்து சாப்பிடலாம். 

குறிப்பு: ஜவ்வரிசி ,பருப்புகள் நன்றாக ஊறி இருந்தாலும் வேகுமோ வேகாதோ என்று அச்சப்படுபவர்கள் அவற்றை தனியாக வேக வைத்தும் இந்த மசாலாக்களுடன் கலந்து செய்யலாம். விருப்பப்பட்டவர்கள் லெமன் சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்!
healthy snacks

நேந்திரம் சிப்ஸ்! 

தேவையான பொருட்கள்:

நேந்திரம் வாழைக்காய் -2

மஞ்சள் பொடி-1 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், தூள் உப்பை நன்றாக கலக்கவும். அதில் சிப்ஸ் கட்டையில் மெலிதாக சிறிய நேந்திரம் வாழை வில்லைகளை போட்டு நன்றாக கலந்து விடவும். இப்பொழுது உப்பும், பொடியும் வில்லைகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். 

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்ததும், பாத்திரத்தில் இருக்கும் நேந்திர வில்லைகளை அரித்து ஒரு உதறு உதறி விட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நல்ல கரகரப்பாக சந்தன கலரில் நேந்திர சிப்ஸ் ரெடி.

மைதா இனிப்பு நீர் பலகாரம்:

செய்ய தேவையான பொருட்கள்:

மைதா -ஒரு கப்

சீனி- அரைகப்

தேங்காய் துருவல்- ஒரு கப்

ஏலப்பொடி -கால் ஸ்பூன்

உப்பு -சிறிதளவு

செய்முறை:

மைதாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையாக பூரிக்கட்டையில் தேய்த்து, குட்டி குட்டித் துண்டங்களாக , நெளி ஸ்பூனால் அல்லது கத்தியால் வெட்டி வைக்கவும். 

வாணலியில் தண்ணீர் வைத்து அவை நன்றாக கொதித்ததும் அதில் மைதா துண்டங்களை போட்டு நன்றாக வேக வைத்து அரித்து ஒரு பாத்திரத்தில் போடவும்.பிறகு  ஒவ்வொரு முறை தண்ணீரில் இருந்து அரித்துப் போட்டதும் அதன் மீது சீனி, தேங்காய், துருவல், ஏலப் பொடி எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். சூட்டில் நன்றாக கலந்து விடும். அப்படியே கப்புகளில் போட்டு பரிமாற வேண்டியதுதான். எளிதாக செய்து அசத்தி விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com