“தால் பாத்தி சுர்மா” இராஜஸ்தானின் பாரம்பரிய உணவு!

 தால் பாத்தி சுர்மா
தால் பாத்தி சுர்மா

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரியமான உணவு “தால் பாத்தி சுர்மா” (Dal Baati Churma) என அழைக்கப்படுகிறது. நாங்கள் ஜெய்ப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது ஒரு உணவகத்தில் இராஜஸ்தானின் புகழ் பெற்ற சாட் உணவான கச்சோரியை (Kachori) ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தோம். அப்போது அங்கு தால் பாத்தி சுர்மா என்ற வார்த்தைகளைக் கேட்க நேரிட்டது. உணவகத்தில் பணிபுரிபவரை அழைத்து தால் பாத்தி சுர்மா என்றால் என்னவென்று கேட்டபோது அவர் அது இராஜஸ்தானின் பாரம்பரியமான ஒரு உணவு என்றார். ஒருநாள் அதை சாப்பிட வேண்டுமென்று முடிவு செய்தோம். அடுத்த நாள் அதைச் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இராஜஸ்தான் வறண்ட சீதோஷண நிலை நிலவும் ஒரு பகுதியாகும். இதனால் இந்த மாநிலத்தில் மற்ற மாநிலங்களைப் போல பச்சைப்பசேல் காய்கறிகள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. எனவே இந்த மாநில மக்கள் பருப்புகள், உலர் பழங்கள், கோதுமை மாவு, நெய், தயிர், இனிப்புகள் முதலான உணவுப் பொருட்களை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நீளமான கூந்தலை அள்ளி முடியலாமே!
 தால் பாத்தி சுர்மா

இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய உணவு தான் தால் பாத்தி சுர்மா ஆகும். இந்தியாவில் இராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் தலைமுறை தலைமுறையாக தால் பாத்தி சுர்மாவை சாப்பிட்டு வருகின்றனர்.

தால் (Dal) என்றால் பருப்பு. பாத்தி என்பது சுட்ட கோதுமை உருண்டை. கோதுமை மாவோடு சிறிதளவு ரவை மற்றும் நெய் ஆகியவற்றைக் கலந்து உருண்டைகளாக்கி சுடப்பட்டு நெய்யில் ஊற வைக்கப்படுகிறது. சுர்மா என்பது இனிப்பு மற்றும் உலர்பழங்கள் கலந்த தானியங்களின் கலவை. ஐந்து வகையான தானியங்களை அதாவது பாசிப் பருப்பு, சிவப்பு மசூர் பருப்பு, துவரம் பருப்பு, சன்னா பருப்பு மற்றும் கருப்பு உளுத்தம் பருப்பு, சர்க்கரை மற்றும் உலர்பழங்கள் ஆகியவற்றைக் கலந்து இந்த சுர்மா செய்யப்படுகிறது. இந்த மூன்றையும் தால் பாத்தி சுர்மா என்று ஒன்றாகப் பரிமாறுகிறார்கள். உருண்டை வடிவிலான பாத்தியை உடைத்து அதன் மீது நெய் மற்றும் பருப்பினை (டால்) ஊற்றிச் சாப்பிட வேண்டும். பின்னர் சுர்மா என்ற இனிப்பு மிகுந்த உணவினைச் சாப்பிட வேண்டும். இத்துடன் கடலைமாவினால் செய்யப்பட்ட கடி என்ற மோர்க்குழம்பு, ரொட்டி, ஜிலேபி, பப்பட் முதலானவையும் பரிமாறப் படுகின்றன.

 தால் பாத்தி சுர்மா...
தால் பாத்தி சுர்மா...

நாங்கள் ஒரு புகழ் பெற்ற ஓட்டலில் தால் பாத்தி சுர்மாவை சுவைத்து மகிழ்ந்தோம். ஒரு பிளேட்டின் விலை 350 ரூபாய். நம்மூர் உணவைப் போல இதை அவ்வளவு எளிதாக சாப்பிட இயலாது. பாத்தியும் சுர்மாவும் சற்று கடினமான உணவு வகையைச் சேர்ந்ததாகும். இந்த பாத்தியை பருப்பில் கலந்து சாப்பிட வேண்டும். ஆனால் இதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் ஜெய்ப்பூரில் தங்கியிருந்த ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் இந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் முக்கிய விசேஷங்களிலும் திருமணங்களிலும் தால் பாத்தி சுர்மா தவறாமல் இடம் பெறுவது வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com