
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்னென்ன பட்சணங்கள் செய்யலாம் என சிந்தித்துக் கொண்டு இருப்போம். அப்படி பட்சணங்கள் செய்யும்போது இந்த குறிப்புகள் உபயோகமாக இருக்கும்.
தீபாவளி பட்சணங்கள் செய்ய தயாராகும்போது சிறு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து அடுப்பு மேடையில் வைத்து பிறகு பிள்ளையாரை வணங்கிவிட்டு பட்சணங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
தீபாவளிக்கு ரவா லாடு பிடித்தோம் என்றால் அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் கலந்தால் ரவாலாடு நல்ல மணமாக இருக்கும்.
தீபாவளிக்கு தேங்காய் எண்ணெயில் பட்சணம் செய்ய முடியாதவர்கள் தாங்கள் பயன்படுத்தும் எண்ணெயோடு சிறிது அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்தாலே போதும் அதுவே தேங்காய் எண்ணையில் செய்ததுபோல ருசியும் மணமும் தரும்.
தீபாவளிக்கு மைசூர்பாகு செய்யும் பொழுது தாம்பாளத்தில் கொட்டியவுடன் அதன் மேலே சீனியை தூவினால் மிகவும் எடுப்பாக இருக்கும்.
தீபாவளிக்கு செய்த பட்சணங்கள் மீதியாக இருந்தால் அது கெட்டுப் போகாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை சிறு மூட்டையாக துணியில் கட்டி பட்சணங்கள் உள்ள டப்பாவில் போட்டு வைத்தால் போதும் பிறகு எடுத்து சாப்பிடும்போது புதிதாக செய்ததுபோல் குணம் மாறாமல் இருக்கும்.
மிக்சர் செய்யும்போது கடைசியில் ஒரு கைப்பிடி சர்க்கரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் மிக்சர் மிக ருசியாக இருக்கும்..
தேங்காய் பர்பி செய்யும் பொழுது தேங்காயுடன் வெறும் வாணலியில் வறுத்து ஊறவைத்த வேர்க்கடலையை சேர்த்து அரைத்து பர்பி செய்யலாம் பர்பி சுவையாக இருக்கும்.
எந்த ஸ்வீட் செய்தாலும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக இருக்கும்.
தீபாவளிக்கு போளி தட்டும் பொழுது வாழை இலையின் பின்பக்கமாக தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
தீபாவளிக்கு பட்சணம் செய்யும் பொழுது எண்ணெய் பொங்காமல் இருக்க ஒரு துளி வினிகர் விடவேண்டும்.
தீபாவளிக்கு மைசூர் பாகு செய்யும்போது ஒரு கப் கடலை மாவிற்கு இரண்டு கப் சர்க்கரை மூன்று கப் நெய் விட்டால் சரியாக வரும்.
இனிப்புகள் செய்ய சர்க்கரை பாகு தயாரிக்கும்போது பாகின் மேல் ஒதுங்கும் அழுக்கை ஒரு கரண்டியால் எடுத்துவிட்டு செய்தால் இனிப்புகள் வெள்ளை வெளேரென்று இருக்கும்.