
நிழலில் வளர வைக்கப்படும் இளந்தளிர் தேயிலையை நன்றாக அரைத்து தூளாக பயன்படுத்தப்படும் தேயிலை பொடிதான் "மட்சா தேயிலை" (matcha tea). நன்றாக கொதித்த சுடுநீரில் நேரடியாக கலந்து பருகும் தேநீர்தான் "மட்சா டீ".
மட்சா என்பது' கேமிலியா சினென்சிஸ் ' என்ற தேயிலை செடி வகையைச் சேர்ந்தது. விவசாயிகள் அதிக நேரம் நிழலில் இந்த தேயிலை செடிகளை வளர்க்கிறார்கள், இது தாவரங்களின் குளோரோபில் மற்றும் அமினோ அமிலங்களை அதிகரிக்கிறது, மேலும் அவை அவற்றிற்கு பச்சை நிறத்தை அளிக்கிறது. தேநீர், லட்டுகள், ஸ்மூத்திகள் மற்றும் பேக்கரி பொருட்களில் கூட மட்சா பொடியைப் பயன்படுத்தலாம்.
"கேமிலியா சினென்சிஸ்" என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் கிரீன் டீயும், மட்சா டீயும். ஆனால், பச்சை நிறத்தில் இருக்கும் மட்சா டீ யில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதோடு பாலிபினால்ஸ், வைட்டமின் சி கிரீன் டீயை விட அதிகம். கிரீன் டீயைவிட அதிகளவில் காபீன் மாட்சா வில் உள்ளது. 2 கிராம் மட்சா பொடியில் 70 மி.கி காபின் உள்ளது.
கிரீன் டீயில் இருப்பதைவிட 3 மடங்கு அதிகம் EGCG மட்சா டீயில் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது. இரண்டிலுமே மனதை அமைதிப் படுத்தும் எல்- தியானின் அமினோ அமிலம் உள்ளது. ஆனால், இது மட்சா டீ யில் அதிகம் உள்ளது. எனவே சுறுசுறுப்பாக இயங்க, தொடர் ஆற்றலை பெற இளைஞர்கள் மட்சா டீயையே அதிகம் நாடுகின்றனர்.
மட்சா தேயிலை இலை முழுவதையும் பயன்படுத்துகிறது. எனவே, மட்சா தேநீரில் மற்ற வகை கிரீன் டீகளை விட காஃபின், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வளர்சிதை மாற்ற சமநிலையை பராமரிக்க,இதய நலன் காக்க மட்சா டீ உதவும் என்கிறார்கள்.இதில் அதிகளவில் பொட்டாசியமும், வைட்டமின் கே யும் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியம் காக்கவும், இரத்த உறைவை தடுக்கவும் உதவுகிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது.
தற்போது மட்சா தேயிலை ஜப்பான் நாட்டிலும், இந்தியாவில் அசாம் மாநிலத்தில் உள்ள டான்சுகியா மாவட்டம் 'சோட்டா டின்கிரைய் எனும் இடத்தில் மட்டுமே பயிராகிறது. அசாமில் 40 லட்சம் மதிப்புள்ள கிரைண்டரில் தினமும் 10 கிலோ மட்சா டீ தூள் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதால் தற்போது தமிழ் நாட்டில் உள்ள ஊட்டி பகுதியில் விளைவிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இது வழக்கமான கிரீன் டீயை விட அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. மேலும் அதிக சுவையும், ஆரோக்கியமும் கொண்டது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும் இந்த டீ உதவுவதாக கூறப்படுகிறது. மட்சாவில் கேட்டசின்கள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள். அதிகமாக உள்ளன, இது செல் சேதத்தைத் தடுக்கவும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தவும் மட்சா டீ உதவுகிறது. இந்த டீயை குடிப்பதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மட்சா டீயை தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவு மட்டுமே குடிக்கவேண்டும். அதிகமாக குடிக்கும்போது சில உடல்நலப் பிரச்னைகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
மட்சாவிலும் ‘காஃபின்’ உள்ளது. ஆனால் அதனுடன் எல்-தியானைன் (L-theanine) அமினோ அமிலம் கலந்துள்ளதால் காபி போல் அல்லாமல் மாட்சா உடலுக்குத் தேவையான சுறுசுறுப்பை மெதுவாக வெளியிடுகிறது. அது மட்டுமின்றி குறுகிய நேரத்துக்கு மட்டும் உடலுக்கு விழிப்புணர்வு தரும் காபியைப்போல அல்லாமல் மட்சா தரும் சுறுசுறுப்பு நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு மட்சா உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பை எளிதில் இழக்கலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் கொழுப்பைக் குறைக்கவும் மட்சா உதவுகிறது. இவை இரண்டும் எடைக் குறைப்புக்கு உதவும் என்று கருதப்படுகின்றன. காப்பியைவிட மட்சாவில் அதிக ‘காஃபின்’ இருப்பதால் மூளையின் மேம்பட்ட செயல்பாட்டுக்கு, கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த மட்சா டீ உதவும் என்கிறார்கள்.