
நீங்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கட்டமைப்பு குலையாமல் பராமரிக்க விரும்பும் வெஜிடேரியனா? அப்படியென்றால் நீங்கள் ப்ரோட்டீன் சத்து நிறைந்த சோயா கீமா பராத்தாவை காலை உணவாக உட்கொள்வது உங்களுக்கு நிறைந்த ஆரோக்கியமும் சக்தியும் தரக்கூடியதாக அமையும்.
சோயா ஜங்க் உருண்டைகளை வேகவைத்து ஸ்பைஸஸ் கலந்து அரைத்து தயாரிக்கப்படும் இந்த உணவு வயிறு நிறையவும், சத்துக்களை வாரி வழங்கவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. சோயா கீமா பராத்தாவின் செய்முறை விளக்கத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
சோயா கீமா பராத்தா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 2 கப்
சோயா ஜங்க்ஸ் 1 கப்
இஞ்சி பேஸ்ட் 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1
பெருங்காயம் ¼ டீஸ்பூன்
ஜீரகம் 1 டீஸ்பூன்
வெங்காயம் 1
மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாட் மசாலா தூள் 1டீஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
செய்முறை:
கோதுமை மாவில் தேவையான உப்பு, தண்ணீர் மற்றும் நெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை பிரித்து ஒரே அளவிலான உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சோயா ஜங்க்ஸ்களை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், சாட் மசாலா பவுடர் சேர்த்து நன்கு கலந்து மூன்று நிமிடம் சிறு தீயில் வைத்து கிளறவும். பின் அரைத்து வைத்த சோயா ஜங்க்ஸ் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். அனைத்தையும் ஒரு சேர கலந்துவிட்டு இறக்கவும்.
பின் கோதுமை மாவு உருண்டைகளை எடுத்து ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் இரண்டு டீஸ்பூன் சோயா ஜங்க் கலவையை வைத்து மூடி பராத்தாக்களாக தேய்த்துக் கொள்ளவும். ஒரு தவாவை அடுப்பில் ஏற்றி தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் தடவவும்.
பராத்தாக்களை ஒவ்வொன்றாக கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்கும்படி சுட்டு எடுக்கவும்.
சூடான சோயா கீமா பராத்தாவை தயிர் அல்லது ஊறுகாய் தொட்டு சுவைத்து உண்ணவும்.