சுவையான ‘பீர்க்கங்காய் பால் கூட்டு’ - வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

பீர்க்கங்காய் பால் கூட்டு...
பீர்க்கங்காய் பால் கூட்டு...

பீர்க்கங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு சக்தியும் உள்ளது. பீர்க்கங்காயில் பீட்டா கேரோட்டின் அதிகம் உள்ளதால், இது கண் பார்வைக்கு நல்லதாகும். இதை சாப்பிடுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை சுத்தப்படுத்தும். அனிமியா இருப்போருக்கு பீர்க்கங்காய் அருமருந்தாகும். இதை உடல் எடை குறைவதற்கும் உண்பார்கள். இத்தகைய சத்துக்களை கொண்ட பீர்க்கங்காயை வைத்து இந்த ரெசிபியை ஈஸியா செய்யலாம் வாங்க.

பீர்க்கங்காய் பால் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய்- 1கப்.

எண்ணெய் -4 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-4.

கருவேப்பிலை- சிறிதளவு.

பெரிய வெங்காயம்-1

பெருங்காயத்தூள்- சிறிதளவு.

காய்ச்சிய பால்-1/4கப்.

துருவிய தேங்காய்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் பீர்க்கங்காய் நார் எடுத்துவிட்டு தோல் சீவி சின்ன சின்னத்துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி,  சீரகம் 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். எல்லாம் சுருள வதங்கியதும் வெட்டி வைத்திருக்கும் பீர்க்கங்காயை இத்துடன் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து பீர்க்கங்காய் முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.

பீர்க்கங்காயை இறக்கி ஆறியதும் நன்றாக மசித்து விட்டு காய்ச்சிய பால் ¼ கப் ஊற்றி அத்துடன் தேங்காய் 1கப் சேர்த்து கிண்டவும். அவ்வளவு தான் செம டேஸ்டான பீர்க்கங்காய் பால் கூட்டு தயார். நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டிலே ஒருமுறை செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

பீர்க்கங்காய் தோல் துவையல்!

பீர்க்கங்காய் தோல் துவையலை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்வதற்கும் அதிக நேரம் ஆகாது. சரி வாங்க, பீர்க்கங்காய் தோல் துவையல் சட்னி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

துவையல் செய்ய தேவையான பொருட்கள்!

பீர்க்கங்காய் தோல்- 2 காயிலிருந்து எடுக்கவும்.

வரமிளகாய்-8

உளுத்தம் பருப்பு-3 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-2 தேக்கரண்டி.

புளி-சிறு துண்டு.

எண்ணெய்- தேவையான அளவு.

தேங்காய்-1 கப்

உப்பு- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
காரில் பயணமா? சோர்வு இல்லாத பயணத்திற்கான சில டிப்ஸ்!
பீர்க்கங்காய் பால் கூட்டு...

செய்முறை விளக்கம்:

முதலில் பீர்க்கங்காயில் உள்ள நாரை நீக்கிவிட்டு, அதனுடைய தோலை மட்டும் சீவி தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 8 வரமிளகாய், 3 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 2 தேக்கரண்டி கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இப்போது அதை தட்டில் மாற்றிக்கொள்ளவும்.

இப்போது அதே பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் ஒரு சிறு துண்டு புளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது மிக்ஸியில் ஒரு கப் தேங்காய், வறுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய், பீர்க்கங்காய் தோல் மற்றும் புளி சேர்த்து, துவையலுக்கு தேவையான உப்பு மற்றும் தண்ணீரை  சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வறுத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பையும், உளுந்தப்பருப்பையும் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்து இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் சட்னி தயார். நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com