
வீட்டிற்கு வரும் விருந்தினரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாலே விதவிதமான டிப்ஸ்களை அள்ளிவிடுவார்கள். அது சரியான நேரத்தில் நமக்கு உதவிபுரியும். அதுபோன்ற சுவையான சமையல் குறிப்புகள் (Delicious recipes) இதோ:
எந்தவிதமான புட்டுக்கும் மாவை சரி செய்யும்போது அதில் தண்ணீர் விட்டு பிசைந்ததும் பிடி கொழுக்கட்டை போல் பிடித்தால் மாவு பிடிபட வேண்டும். அதேபோல் உதிர்த்துவிட்டாலும் நன்றாக உதிரவேண்டும் அதுதான் புட்டுமாவுக்கான பதம்.
சிறிதளவு தனியாவுடன் சீரகத்தையும் சேர்த்து நெய்யில் வறுத்து பொடித்து அந்தப் பொடியை சாம்பார் கொதித்து இறக்கும்போது தூவி இறக்கினால் சாம்பார் நல்ல மனத்துடன் இருக்கும். சாப்பிடவும் நல்ல ருசி கொடுக்கும்.
ஒரு சின்ன சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்றாகத்துருவி அதை கோதுமை மாவில் கலந்து பரோட்டா செய்யலாம். நல்ல ருசியாக இருக்கும்.
கருப்பு சுண்டல் நன்றாக அவிந்ததும் அதில் சிறிதளவு புளிகரைசல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி போட்டு நன்றாக கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றியதும் எண்ணெயில் தாளித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
பாசி பயற்றுடன் கைப்பிடி வேர்க்கடலையையும் நன்றாக ஊற வைத்து அவித்து அதில் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து சுண்டல் செய்ய அனைவரும் விரும்பி உண்பர்.
ராஜ்மாவை நன்றாக தோல் உதிர வேகவைத்து எண்ணெய், கடுகு சேர்த்து தாளிக்கும்பொழுது இஞ்சி மிளகாய் பொடி சேர்த்து தாளித்து சிறிதளவு லெமன் சேர்க்க நல்ல சுவை கிடைக்கும்.
தேங்காய் பால் சாதம் செய்யும்பொழுது கைப்பிடி சோள முத்துக்களையும் சேர்த்து வேகவைத்தால் சாதம் ருசிக்கும்.
சோளத்தை வேகவைத்து உதிர்த்து ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டால் தேவையான காய்கறிகளுடன் இதையும் சேர்த்து செய்ய வசதியாக இருக்கும்.
நூடுல்ஸ், இடியாப்ப சேவை போன்றவை செய்யும்போது தக்காளியை அரைத்து வடிகட்டிய சாற்றில் செய்தால் ருசியாக இருக்கும்.
மூன்று பங்கு ரவை இட்லி மிக்ஸ் உடன் ஒரு பங்கு கடலை மாவு, ஒரு பங்கு தயிர், சிறிதளவு சமையல் சோடா சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு டோக்ளா செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.
வெளியூர் செல்லும் பொழுது வீட்டில் நெய் அதிகமாக இருந்தால் அந்த நெய்யுடன் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து சூடாக்கி வைத்து சென்றால் கெடாமல் இருக்கும்.
சிறுதானிய மாவில் முறுக்கு செய்யும்பொழுது வறுத்த உளுந்துடன் பொட்டுக்கடலையும் சேர்த்து அரைத்து செய்தால் முறுக்கு மிருதுவாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும்.
முந்திரி பருப்பை ஒடித்து நெய்யில் வறுத்து வைத்துக்கொண்டால் கலவை சாதம் மற்றும் இனிப்பு வகைகள் செய்யும்போது பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.
இட்லிப் பொடி அரைக்கும்போது சிறிதளவு ஆளி விதையை வறுத்து சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும். சத்தும் கூடும்.
தக்காளி சாதம் கிளறும்போது பச்சை மிளகாய் ,தக்காளி, வெங்காயத்தை அரைத்து எண்ணெயில் வதக்கிவிட்டு செய்தால் சாதம் சுவையாக இருக்கும்.
ரோஸ் எசென்ஸ் வாங்கி வைத்துக்கொண்டால் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ரெண்டு சொட்டு ரோஸ் எசென்ஸ் உப்பு ஒரு சிட்டிகை போட்டு நன்றாக கலந்து குடித்தால் தாகம் தணியும். இந்த திடீர் பன்னீர் சோடாவும் தயாரித்துவிடலாம்.
சர்க்கரைப் பொங்கல் செய்து இறக்கியதும் அதில் கெட்டியான தேங்காய் பால் ஒரு கப் ஊற்றி கலந்துவிட்டால் சுவை கூடுவதுடன், ஆறிய பிறகு பொங்கல் தளர்ச்சியாகவும் இருக்கும்.
ஏர் ஃப்ரையரில் பேஸ்கட் பெரிதாக இருந்தாலும் அதில் நிறைய உணவை திணிக்கக் கூடாது. ஒரே ஒரு அடுக்கு மட்டுமே வைக்க வேண்டும். அப்போதுதான் இயற்கையில் வெப்ப காற்று சமமாக உணவின் எல்லா பக்கங்களிலும் பட்டு சமையல் பூரணமாகும் .வறுக்கும் உணவுக்கும் மொறு மொறு தன்மை முழுமையாகக் கிடைக்கும்.
சாம்பார் பொடி, குழம்பு பொடி, ரசப்பொடி அரைக்கும் பொழுது கைப்பிடி கறிவேப்பிலையையும் காய வைத்துப் போடுங்கள். கருவேப்பிலை கிடைக்காத பொழுது இந்த சத்து போதுமான அளவு கிடைத்துவிடும்.
தக்காளி ரசம் வைக்கும்பொழுது தக்காளியுடன் சீரகம், மல்லித்தழை, பூண்டு இவற்றை கலந்து அரைத்து சேர்த்து கொதிக்கவிட்டால் சுவையாக இருக்கும்.
ரவை, மைதா, அரிசி மாவு கலந்து தோசை வார்க்கும் முன் ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், பொடியாக அறிந்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலையை பொடியாக அரிந்து அந்த மாவில் நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊறவிட்டு தோசை வார்த்தால் ரவா தோசை ஹோட்டல் தோசைபோல் இருக்கும்.