
வாழைப்பழ அதிரசம்
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழம் – 4
மைதா மாவு – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – 2 ஸ்பூன்
தேங்காய் (பொடியாக நறுக்கியது) – ½ கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரையை போட்டு நன்கு பொடித்து எடுக்கவும். அதே மிக்ஸியில் உரித்த வாழைப்பழங்களை நறுக்கி போட்டு அரைத்துக்கொள்ளவும்.
பொடித்த சர்க்கரையுடன் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்கு கலந்து, அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் நறுக்கிய தேங்காயைப் போட்டு தண்ணீர்விடாமல் நன்கு கலந்துகொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்த அதிரச மாவை சிறு சிறு துணுக்குகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சாப்பிட சுவையான வாழைப்பழ அதிரசம் ரெடி!
வெங்காயப் பக்கோடா
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் காரத் தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதல் வகை:
முதலில் நன்கு கொதிக்கும் நீரில் தேவையான அளவு உப்புடன் பெருங்காயத்தூள் சேர்த்து, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டியில்லாமல் கெட்டியாக கலந்துகொள்ளவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, கலந்துள்ள அரிசி மாவுடன் சேர்க்கவும். சீரகம் மிளகாய்த்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 2 ஸ்பூன் காய்ந்த எண்ணெயை எடுத்துப் பிசைந்த மாவில் சேர்த்து மீண்டும் பிசையவும். சிறு துணுக்குகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இரண்டாம் வகை:
பெரிய வெங்காயத்தை மெல்லிய நீள வாக்கில் வெட்டவும். வெட்டிய வெங்காயத்தை பிசைந்த அரிசி மாவுடன் தேவையான மிளகாய்த்தூள் சேர்த்து, பிசறி எடுத்து காய்ந்த எண்ணெயில் உதிர்த்துவிடுவதுபோல் போட்டு நன்கு பொன்னிறமாக பொரிக்கவும்.
கறிவேப்பிலை மற்றும் பூண்டை ஜல்லடையில் போட்டு எண்ணெயில் பொரித்து, பொரித்த பக்கோடாவிற்கு மேலே பரப்பி கலந்துவிடவும்.
மாலை நேரம் டீயுடன் சாப்பிட பேக்கரி சுவையில் சூடான மொறு மொறுப்பான வெங்காயப் பக்கோடா ரெடி.