
சிறுநீர்ப்பை (bladder) மற்றும் கிட்னி ஆரோக்கியத்திற்கு உதவும் கார்ன் சில்க் த்ரெட்ஸ் (corn silk threads)!
நாம் உண்பதற்கு வாங்கும் மக்காச்சோளக் கதிர், வெளிப்பக்கம் மூன்று நன்கு மெல்லிய இலை போன்ற அமைப்புகளால் மூடப்பட்டிருக்கும். உள் பக்கம் மஞ்சள் நிற சோள மணிகளின் மீது பட்டு நூல் போன்ற இழைகள் படர்ந்திருக்கும். அவற்றைப் பிய்த்தெறிந்து விட்டு சோளத்தை நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
தூக்கி ஏறியப்படும் இந்த தங்க இழைகள் போன்ற நார்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் அவை சிறுநீர்ப்பை மற்றும் கிட்னி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறந்த முறையில் உதவி புரியுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கார்ன் சில்க் த்ரெட்ஸ்களில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், குடல் இயக்கம் மற்றும் மூளைக்கு இடையிலான தொடர்பை (gut-brain axis) சமநிலையில் வைத்துப் பாதுகாத்து, ஜீரணம் சிறப்பாக நடைபெற உதவுவதாக டாக்டர் பால் தெரிவித்துள்ளார். 50 கிராம் கார்ன் சில்க் த்ரெட்ஸ்ஸில் 5 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், அது ஒருவரின் ஒரு நாளைய தேவையில் 20 சதவிகிதத்தை அளிக்கக் கூடியது எனவும் கூறப்படுகிறது. இதை எவ்வாறு சாப்பிடலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
கார்ன் சில்க் த்ரெட்ஸ் சட்னி ரெசிபி:
உலர்ந்த கார்ன் சில்க் த்ரெட்ஸ், கறிவேப்பிலை, பூண்டு மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் கொஞ்சமாக வறுத்தெடுத்து, உப்பு புளி சேர்த்து அரைக்க ஊட்டச் சத்து நிறைந்த சுவையான, குடல் ஆரோக்கியம் காக்க வல்ல சட்னி தயார்.
கார்ன் சில்க் த்ரெட்ஸ் டீ:
இரண்டு கப் தண்ணீரில் 2-3 டீஸ்பூன் ஃபிரஷ் கார்ன் சில்க் த்ரெட்ஸ் சேர்த்து 10-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு அதை வடிகட்டி குடிக்கவும். கலோரி மற்றும் காஃபின் இல்லாத, புத்துணர்ச்சி தரக்கூடிய டீ இது. கிட்னி மற்றும் சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கூடியது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப்பாதுகாக்கவும், வீக்கங்களைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கக் செய்யவும் கார்ன் சில்க் உதவி புரிவதாக விலங்குகள் மீது நடத்தப்பட்ட சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஸ்ட்ரோக் வரும் அபாயத்தை தடுக்கவும், நீரிழிவு நோயின் தீவிரத்தை குறைக்கவும் கார்ன் சில்க் உதவுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் நம்பிக்கையூட்டுவதாக தோன்றினாலும், மனிதர்கள் மீதான ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்தமுறை மக்காச்சோளக் கதிர் வாங்கும்போது இந்த கார்ன் சில்க் இழைகளை எறிந்துவிடாமல் மேற்கூறிய இரண்டு ரெசிபிகளை செய்துதான் பாருங்களேன்!