
சுவையான முருங்கைக்காய் ரசம் மற்றும் பூசணிக்காய் மக்காச்சோள சொதி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
முருகைக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்.
முருங்கைக்காய்-3
துவரம் பருப்பு-1/4 கப்
புளி கரைச்சல்-1/2 டம்ளர்
தக்காளி-1
வரமிளகாய்-1
பூண்டு-4
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
கொத்தமல்லி- சிறிதளவு
கருவேப்பிலை-சிறிதளவு
வெல்லம்-சிறிதளவு
கடுகு-1 தேக்கரண்டி
வெந்தயம்-சிறிதளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
முருங்கைக்காய் ரசம் செய்முறை விளக்கம்.
முதலில் துவரம் பருப்பு ¼ கப்பை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு தண்ணீர் விட்டு 30 நிமிடம் நன்றாக வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது முருங்கைக்காய் 3 ஐ நீளமாக வெட்டி மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இப்போது முருங்கைக்காயில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு உள்ளேயிருக்கும் விழுதை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி 1 சிறிதாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் விட்டு கடுகு1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 1, வெந்தயம் சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து தாளிக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை சேர்த்து மஞ்சள் தூள் சிறிதளவு, பருப்பு கரைச்சல் 1/4 கப், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பூண்டு 4 நசுக்கி இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். ரசம் நன்றாக கொதித்து வரும் போது புளிக்கரைச்சல் ½ டம்ளர், முருங்கை விழுது ஆகியவற்றை சேர்க்கவும். வெல்லம் 1 சின்ன துண்டு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கினால், சுவையான முருங்கைக்காய் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பூசணிக்காய் மக்காச்சோள சொதி செய்ய தேவையான பொருட்கள்.
பூசணிக்காய்-1 கீற்று
மக்காச்சோளம்-1/2 கப்
பீன்ஸ்-4
கேரட்-1
தேங்காய்ப்பால்-1 கப்
தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3
உப்பு-தேவையான அளவு
கருவேப்பிலை-சிறிதளவு
பூசணிக்காய் மக்காச்சோள சொதி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் நறுக்கிய கேரட் 1, நறுக்கிய பீன்ஸ் 4, சிறிதாக நறுக்கிய பூசணிக்காய், மக்காச்சோளம், பச்சை மிளகாய் 3 ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து வேகவைக்கவும்.
இவை வெந்ததும் தேங்காய்ப்பாலை சேர்த்து கொதி வந்ததும் இறக்கிவிடவும். பிறகு மேலே 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும். சுவையான பூசணிக்காய் மக்காச்சோள சொதி தயார். இதை இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.