இந்திய உணவு வகைகளில் பன்னீர் மசாலா ஒரு பிரபலமான, சுவை மிகுந்த உணவாகும். இது பன்னீர், தக்காளி மற்றும் மசாலா பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஹைதராபாத் பன்னீர் மசாலா அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்காக பிரபலமானது. இதில் கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் போன்றவையும் பயன்படுத்தப்படுவதால், இதன் சுவை வேற லெவலில் இருக்கும். இந்தப் பதிவில் வீட்டிலேயே சுவையாக ஹைதராபாத் பன்னீர் மசாலாவை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10-12 இலைகள்
கொத்தமல்லி தழை - சிறிது (அலங்கரிக்க)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
பன்னீரை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்ததாக வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது தக்காளி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தனியாத்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஊறவைத்த பன்னீர் துண்டுகளை தண்ணீரை வடிகட்டி எடுத்து, தக்காளி கலவையில் சேர்த்து கிளறுங்கள். பின்னர் பன்னீர் துண்டுகள் மென்மையாக வேகும் வரை 15 நிமிடங்கள் அப்படியே வேக விடவும்.
இறுதியில் அதில் கொத்தமல்லி தழையைத் தூவி அலங்கரித்தால் சூடான ஹைதராபாத் பன்னீர் மசாலா தயார். இது சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
இந்த செய்முறையைப் பின்பற்றி ஹைதராபாத் பன்னீர் மசாலா செய்து பார்த்து, உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.