

லசூனி மேத்தி (Lasooni Methi) ரெசிபி
தேவையான பொருட்கள்:
.ஃபிரஷ் வெந்தயக் கீரை (Methi) இலை 2 கப்
நசுக்கிய பூண்டு 12 பல்
நறுக்கிய பெரிய வெங்காயம் 1
பொடிசா நறுக்கிய தக்காளி 1
நறுக்கிய பச்சை மிளகாய் 1
சீரகம் ½ டீஸ்பூன் .மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் ½ டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் ¼ டீஸ்பூன்
ஃபிரஷ் கிரீம் அல்லது மலாய் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மேத்தி இலைகளை நன்கு கழுவி, நறுக்கிக்கொள்ளவும். அதன் மீது சிறிது உப்பை தூவி கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின் அதைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனால் கீரையின் கசப்புத்தன்மை நீங்கிவிடும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி சீரகத்தைப் போடவும். சீரகம் வெடித்ததும் பூண்டுப் பற்களை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கிளறி விடவும். பிறகு வெந்தயக்கீரை இலைகளைப் போட்டு 5-6 நிமிடம் கீரையை வேக வைக்கவும். பிறகு கரம் மசாலா தூள் மற்றும் கிரீம் சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.
பரோட்டா, பஜ்ரா ரொட்டி, ஜீரா ரைஸ் போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்ண சுவையான லசூனி மேத்தி தயார்.
முட்டைகோஸ் பட்டாணி மசாலா கறி ரெசிபி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய சிறிய சைஸ் கோஸ் 1
பச்சைப் பட்டாணி 1 கப்
நசுக்கிய பூண்டுப் பல் 2
நறுக்கிய வெங்காயம் 1
துருவிய இஞ்சி 1 டீஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் 1 டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு & மிளகுத் தூள்
நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். பின் முட்டைக்கோஸ் சேர்த்து, வதங்கியவுடன் பட்டாணியைப் போட்டு ஸ்டிர் ஃபிரை பண்ணவும். பட்டாணி மிருதுவானவுடன் மிளகுத் தூள் தூவி, சோயா சாஸ் ஊற்றவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி, 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை தெளித்து மூடிவைக்கவும்.
சாதம், நூடுல்ஸ் போன்ற உணவுகளுக்கு சைடு டிஷ்ஷாக வைத்துக்கொள்ள சிறந்தது முட்டைகோஸ் பட்டாணி மசாலா கறி!