

பப்பாளிப்பழ கீர்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பப்பாளிப்பழம் 1 கப்
ஊறவைத்து வேக வைத்த ஜவ்வரிசி 1/2 கப்
வெல்லப்பாகு 1 கப்
பால் 2 டம்ளர்
ஏலக்காய் தூள் 2 சிட்டிகை
பொடித்த வறுத்த முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பு சேர்த்து ஒரு கப்
செய்முறை:.
பப்பாளிப் பழத்தை கூழாக்கிக்கொள்ளவும். பாலை காயவைத்து அதனுடன் ஜவ்வரிசி மற்றும் வெல்லப் பாகினை ஊற்றி நன்கு கலந்து கொதித்தவுடன் அதனுடன் பப்பாளிக் கூழ் கலந்து ஏலக்காய் தூள் தூவி இறக்கி வைக்கவும். சூடான பப்பாளிப் பழ கீர் ரெடி. அதில் பொடித்த முந்திரி பாதாம் பிஸ்தா பருப்புகளால் அலங்கரித்து சூடாகவோ பிரிட்ஜில் வைத்து எடுத்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.
பப்பாளிப் பழ அல்வா
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பப்பாளிப் பழம் – 2 கப்
சோளமாவு – 2 ஸ்பூன்
சர்க்கரை / வெல்லம் – தேவையான அளவு
நெய் – ½ கப்
ஏலத்தூள் – 2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள் – 1 கப்
செய்முறை:
பப்பாளிப் பழத்தை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கூழாக்கி வைத்துக்கொள்ளவும். சோளமாவை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளைச் சேர்த்து பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கரையவிடவும். பாகில் உள்ள அழுக்கை அகற்றி விட்டு, அதில் பப்பாளிப் பழக் கூழைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பிறகு அதனுடன் சோளமாவு கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து, கைவிடாமல் மிதமான தீயில் வைத்து கிளறிவிடவும். இடையில் சிறிது நெய் சேர்த்து நன்கு கலந்து கிளறவும்.
அல்வா நன்கு சுருண்டு வரும் போது, அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, பொரித்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளைச் சேர்த்து கலந்து, ஏலத்தூள் சேர்த்து கிளறவும். பின்னர் நெய் தடவிய தட்டில் பரப்பி ஆறவிடவும். ஆறிய பின், விருப்பமான வடிவில் வில்லைகள் போடவும். சுவையான பப்பாளிப்பழ அல்வா ரெடி!