டேஸ்டியான குழம்பு வகைகள்!

healthy kuzhambu...
healthy kuzhambu... Image credit - youtube.com
Published on

பச்சை மாங்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளிப்பான மாங்காய் _1, பெரிய வெங்காயம் _1, புளி _சிறு நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகுத்தூள் _3 ஸ்பூன், மஞ்சள்தூள் _ 3/4 ஸ்பூன், உப்பு _ தேவைக்கு,

தாளிக்க: கடுகு _1 ஸ்பூன், வெந்தயம் _1 ஸ்பூன், கடலைப் பருப்பு _ 1/2 ஸ்பூன், மிளகாய் _2, பெருங்காயத்தூள் _2 ஸ்பூன்,  நல்லெண்ணெய் _2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை _ சிறிதளவு

செய்முறை: மாங்காய், வெங்காயத்தை சுத்தம் செய்து, மாங்காயை சற்று பெரிய துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 11/2 ஸ்பூன் நல்லெண்ணெய்  விட்டு சூடானதும், கடுகை போட்டு பொரிந்ததும் கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் தாளித்து, வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும், மாங்காய், குழம்பு மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் எண்ணெயிலே பிரட்டவும். பிறகு புளிக் கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். புளி வாசனை போய், கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விட்டு மேலே 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய், பெருங்காயத்தூள், மல்லித்தழை தூவி இறக்கவும். வித்தியாசமான, சுவையான, சுலபமான ‘பச்சை மாங்காய் குழம்பு’ தயார்.

வாழைப்பூ புளி குழம்பு (சைவ மீன் குழம்பு)

தேவையான பொருட்கள்: வாழைப்பூ நறுக்கியது _1 கப், நறுக்கிய பெரிய வெங்காயம் _1, தக்காளி _1, புளி நீர் 1/2 கப், அரைத்த தேங்காய் விழுது _1/2 கப், மிளகாய்த்தூள் _1 ஸ்பூன், மல்லித்தூள் _2 ஸ்பூன், நல்லெண்ணெய் _4 ஸ்பூன், மல்லித்தழை நறுக்கியது _ சிறிது, கடுகு _ 1 ஸ்பூன், மிளகு வத்தல் _2, கருவேப்பிலை _1 கொத்து, சீரகம் _1 ஸ்பூன், பூண்டு _3 பல், மிளகு _10

செய்முறை: சீரகம், பூண்டு, மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து  2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கி பின் தக்காளி யையும் அத்துடன் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து ஆற விடவும். ஆறியப் பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
பூ போல இட்லிக்கு, தொட்டுக்க காரசாரமா தேங்காய் ஊறுகாய் (Pickle) செய்யலாமா?
healthy kuzhambu...

பின்பு அதே கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வாழைப்பூவை  நன்றாக வதக்கி அதன் மேல் வெங்காய, தக்காளி பேஸ்டை சேர்த்து நன்கு பிரட்டவும். பிறகு அரைத்த தேங்காய் விழுதையும் அதில் சேர்த்து நன்கு கலக்கி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளலாம். அரைத்து வைத்த சீரகம், பூண்டு, மிளகு கலவையை குழம்பினுள் சேர்த்து உப்பு மற்றும் மசாலா சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து குழம்பை நன்றாக கொதிக்க வைக்கவும்.

தாளிப்பதற்கு ஒரு கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் மிளகாய், வற்றல் மற்றும் கருவேப்பிலை போட்டு வதக்கி தயார் நிலையில் இருக்கும் குழம்பை இந்த கடாயில் ஊற்றி நன்றாக கலக்கவும். இறுதியாக மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். இது சாதம், இட்லி, தோசையில் ஊற்றி சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com