
பெண்களில் பல பேருக்கு இட்லி பூ மாதிரி சாஃப்டா வருவதில்லை என்கிற ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கும். இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் டிப்ஸ்களைப் பின்பற்றி அவர்கள் பஞ்சு போல இட்லிகளை வார்த்தெடுக்கலாம்.
டிப்ஸ்
1. தரமான கூட்டுப்பொருட்கள்: இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை தரமான ஸ்டோரில், தரத்தில் உயர்ந்த பொருட்களை தேர்ந்தெடுத்தல்.
2.சரியான விகிதம் மற்றும் ஊறவைக்கும் நேரம்:
இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சரியான விகிதத்தில் அளந்து, தனித்தனியாக நான்கிலிருந்து ஆறு மணிநேரம் ஊற வைக்கவும்.
3.அரைத்தல்: உளுத்தம் பருப்பை தனியாக வெண்ணெய் போல் மசிய அரைத்தெடுக்கவும். அரிசியை சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். அரைக்கும்போது தேவையான அளவு மட்டும் நீர் சேர்க்கவும்.
4.நொதிக்க வைத்தல்: தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு மாவையும் ஒன்றாய் கலந்து காற்றோட்டமான இடத்தில் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை நொதிக்க விடவும். மாவு காற்றுடன் கலந்து அளவில் இரண்டு மடங்காக உயர்ந்து விடும்.
5.சரியான பதத்திற்கு மாவை கரைத்தல்: மாவில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து மிக கெட்டியாக இல்லாமலும் எடுத்து ஊற்றும் அளவில் இருக்குமாறும் கரைத்துக் கொள்ளவும்.
6.வேக வைத்தல்: ஸ்டீமர் அல்லது இட்லி குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இட்லி தட்டில் நெய் தடவி மாவை குழியில் முக்கால் உயரத்திற்கு ஊற்றவும். பின் பாத்திரத்திற்குள் வைத்து மூடி பத்து நிமிடம் மீடியம் தீயில், மூடியை திறக்காமல் வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி இரண்டு நிமிடம் கழித்து இட்லிகளை எடுக்கவும்.
தேங்காய் ஊறுகாய்:
தேவையான பொருட்கள்
தேங்காய் 1 மூடி
பொடிசா நறுக்கிய பூண்டு 4 டீஸ்பூன்
பொடிசா நறுக்கிய இஞ்சி 4 டீஸ்பூன்
பொடிசா நறுக்கிய பச்சை மிளகாய் 4 டீஸ்பூன் கறிவேப்பிலை இலைகள் 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் 10
பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன்
வெந்தயம் 1½ டீஸ்பூன்
மல்லித் தூள் ¼ டீஸ்பூன்
தண்ணீர் ¼ கப்
நல்லெண்ணெய் 250 கிராம்
உப்பு தேவைக்கேற்ப
வினிகர் (விருப்பப்படி)
செய்முறை:
தேங்காயை கழுவி மெல்லிய இரண்டு இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிவப்பு மிளகாய் வற்றல், வெந்தயம், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை போட்டு வறுத்து (dry roast) பின் மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும். நல்லெண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் துண்டுகளைப் போடவும். பிறகு அவற்றுடன் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வதக்கவும். அதனுடன் பொடித்து வைத்த பவுடர், பெருங்காயத் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்,
மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும். ஊறுகாய் கெட்டிப் பதத்திற்கு வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், விருப்பப்பட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து இறக்கவும்.
இட்லியுடன் சேர்த்து உண்ண சுவை மிக்க தேங்காய் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை தோசை, ரொட்டி, தயிர் சாதம் போன்றவற்றிற்கும் தொட்டு உண்ணலாம்.