
காலை டிபனுக்கு குட்டி குட்டி பணியாரங்கள் இருந்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதோ பணியார பிரியர்களுக்காகவே இங்கு சில சத்தான இனிப்பு பணியார வகைகள்.
மைதா பணியாரம்
தேவை;
மைதா மாவு - 2 கப்
வாழைப்பழம் - சிறியது 2 சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை -1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவை சலித்து அதனுடன் வாழைப்பழத்தை மசித்து நாட்டுச்சர்க்கரை சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து விட வேண்டும். வாணலியில் எண்ணெயை காய வைத்து ஒரு குழி கரண்டி மாவை ஊற்ற வேண்டும் . பணியாரம் எழும்பியவுடன் திருப்பி போட்டு வெந்தது பார்த்து எடுக்க வேண்டும். விரும்பினால் ஒரு மேஜை கரண்டி ரவை சேர்த்து வாழைப்பழம் போடாமலும் சுடலாம்.
மைதா முட்டை பணியாரம்
தேவை;
மைதா -1/2 கிலோ
சர்க்கரை- 200 கிராம்
தேங்காய் பால் - 1 கப்
முட்டை -3
சோடா உப்பு -ஒரு சிட்டிகை
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை;
முட்டையை நன்றாக அடித்து அத்துடன் சலித்த மைதா மாவு, நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை, உப்பு சிட்டிகை மற்றும் சோடா உப்பு கலந்து கெட்டி தேங்காய் பால் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவை சூடான எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். விரும்பினால் இரண்டு ஏலக்காய்கள் ஒன்று இரண்டாக பொடி செய்து போடலாம் .
கோதுமை பணியாரம்
தேவை;
சம்பா கோதுமை மாவு- 400 கிராம்
பச்சரிசி மாவு - 400 கிராம்
வெல்லம் - 300 கிராம்
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் -சிறிது
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை;
வெல்லத்தை நன்கு பொடித்து சிறிது தண்ணீரில் ஊற்றி கலந்து வைக்கவும். வெல்லம் கரைந்ததும் அதனுடன் கோதுமை மாவு , பச்சரிசி மாவு போட்டு கட்டிகளின்றி கரைத்து அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் கலந்து பணியார சட்டியில் பணியாரங்களாக ஊற்றி எடுக்கலாம்.
ரவை பணியாரம்
தேவை;
சாதா ரவை - 1 கப்
மைதா - 1 கப்
தேங்காய் -அரை மூடி
ஏலக்காய் -8
முந்திரி பருப்பு - 10
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை -1 கப்
செய்முறை:
ரவை மைதா இரண்டையும் தேங்காய் பால் விட்டு கெட்டியாக கரைத்து சிறிது நேரம் ஊறிய பின் சர்க்கரையை சேர்த்து ஏலப்பொடி, நறுக்கிய முந்திரிப் பருப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து உருண்டை கரண்டியால் அளவாக விடவும். எழும்பி வந்து வெந்ததும் திருப்பி வெள்ளையாக எடுக்கவும். தேங்காய் பாலுக்கு பதில் தேங்காய் பூவையும் துருவி போடலாம்.
அரிசிப் பணியாரம்
தேவை;
பச்சரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு -2 டேபிள்ஸ்பூன் கருப்பட்டி - ஒன்றரை கப்
உப்பு -சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு இவற்றை நன்கு ஊறவைத்து மைய அரைத்துக்கொண்டு சிட்டிகை உப்புடன் கருப்பட்டியை பொடித்து அதனுடன் சேர்த்து கரைக்க வேண்டும். ஒருமணி நேரம் ஊறலாம். பின்பு வாணலியில் எண்ணையை காய வைத்து ஒரு குழிக் கரண்டி மாவை ஊற்றவேண்டும் பணியாரம் எழும்பியவுடன் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.