
பன்னீர் யக்னி என்பது ஒரு காஷ்மீரி ரெசிபி. இதனை சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
பன்னீர் யக்னி:
பனீர் 200 கிராம்
வெங்காயம் 1
பச்சை குடைமிளகாய் 1
சிவப்பு குடமிளகாய் 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
வறுத்து பொடி செய்ய:
தனியா 1 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் 4
பட்டை ஒரு துண்டு
கிராம்பு 3
ஏலக்காய் 1
அரைப்பதற்கு:
முந்திரி பருப்பு 10, 12
தயிர் ஒரு கப்
பன்னீர் துண்டுகள் 4
வாணலியை அடுப்பில் வைத்து வறுக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி சிறிது ஆறவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைக்கவும்.
பத்து பன்னிரண்டு முந்திரிப் பருப்புகளை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, நான்கு பன்னீர் துண்டுகள், தயிர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்தெடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பனீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் வெங்காயம், நறுக்கிய குடைமிளகாய்களை சேர்த்து அதற்குத் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்த தயிர்க் கலவையை விட்டு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து தேவையான உப்பும் போட்டு கொதிக்க விடவும். ஒரு கப் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு கடைசியாக அதில் வறுத்த பனீர் துண்டுகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்க மிகவும் ருசியான பனீர் யக்னி தயார்.
பனீர் சமன்:
பனீர் 200 கிராம்
பால் 2 கப்
பிரிஞ்சி இலை 1
கிராம்பு 4
ஏலக்காய் 2
இஞ்சி சிறிது
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
சோள மாவு 1 ஸ்பூன்
எண்ணெய் இரண்டு ஸ்பூன், நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து வாணலியில் பனீர் துண்டுகளை நன்கு வறுத்தெடுக்கவும். சோம்பு, சீரகம், ஏலக்காய் மூன்றையும் வாணலியில் வறுத்து அத்துடன் இஞ்சி சேர்த்து பொடிக்கவும்.
வாணலியில் பிரிஞ்சி இலை, கிராம்பு,1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து 2 கப் பால் விடவும். அதில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். சோம்பு, சீரகம், ஏலக்காய் பொடித்ததையும் சேர்த்து கொதிக்க விட்டு சிறிது கெட்டியானதும் சோள மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்க விட்டு இறக்கவும். இதனை சப்பாத்தி, பூரி,சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.