
சமைத்து சாப்பிடுவதற்கு சோம்பேறித்தனப்படுபவர்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுகின்றனர். அப்படி உடனடியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சமைக்காமல் சாப்பிடும் அரிசியை பற்றி இப்பதிவில் கூற இருக்கிறோம்.
இந்தியாவின் மிக முக்கியமான உணவு அரிசி. அதிலும் தென்னிந்தியாவில் அரிசி உணவு மிகவும் பிரசித்தம். ஆனால் அசாமில் விளையும் அகோனி போரா அரிசி இருந்தால் இதனை சமைப்பதற்கு கேஸ் அடுப்பு, குக்கர் மற்றும் அதற்கான நேரமும் தேவை இல்லை.
மாயாஜால அரிசி என்றும் மென்மையான அரிசி என்றும் அழைக்கப்படும் இந்த அகோனி போரா நமது சோறாக்கும் முறையை முற்றிலும் மாற்றி அமைக்கிறது.
இதற்கு குக்கர், அடுப்பு என எதுவும் தேவையில்லை. அகோனி போரா அரிசி புழுங்கல் அரிசி வகையைச் சேர்ந்தது. மேலும் இந்த அரிசி குறைந்த அமிலோஸ் உள்ளடக்கத்தை அதாவது 4.5% கொண்டது.
மற்ற அரிசி வகைகளில் 20 - 25 சதவீதம் அமிலோஸ் உள்ளடக்கம் கொண்டிருக்கிறது. இது தானியங்களின் கடினத்தன்மைக்கு காரணம் ஆகிறது. இந்த அகோனி போரா அரிசியில் மிகக்குறைந்த அமிலோஸ் இருப்பதால் கொதிக்கவேண்டிய அவசியம் இல்லை.
குளிர்ந்த நீராக இருந்தால் இந்த அரிசியை 45 நிமிடங்கள் ஊற வைத்தால் சாதம் ரெடி. சுடு தண்ணீராக இருந்தால் 15 அல்லது 20 நிமிடங்களில் இலை போட்டு பரிமாறி விடலாம். இந்த அரிசி மேற்கு அசாம் பகுதிகளில் அதிகளவில் விளைகிறது. போரா சால் என்னும் ஒட்டும் அரிசி வகையைச் சேர்ந்தது. அதிக புரதசத்துக்கள் நிறைந்தது. நான்கு ஐந்து மாதங்களில் விளையக்கூடியது.
அகோனி போரா என்ற கோமல் சவுல் அரிசி எளிதில் ஜீரணிக்கக் கூடியது அதனால்தான் இந்த வாசனை மற்றும் பஞ்சுபோன்ற அரிசி வயிற்றில் லேசாக இருக்கிறது. இது ஒரு பல்துறை மூலப்பொருளையும் உருவாக்குகிறது, ஏனெனில் இது ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கவில்லை, மேலும் இது மற்ற, வலுவான, சுவையுடன் கூடிய உணவுகளின் சுவையைப் பெறுகிறது.
குட்டையாக வளரும் அகோனி போரா அரிசி வகையால் வைக்கோல் உற்பத்தி குறைவாக இருக்கும். அத்துடன் அறுவடைக்கும் பதப்படுத்துவதற்கும் மிகவும் எளிமையானது இந்த அரிசி.
அசாமின் டிடாபோர் அரிசி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் அகோனி போரா அரிசி 1992 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது.
சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் அகோனி போரா அரிசி உண்மையிலேயே அனைவருக்கும் வரப் பிரசாதம் என்பதில் சற்றும் ஐயமில்லை.