
எப்பொழுதுமே வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு அவ்வப்பொழுது அறையில் உள்ள பொருட்களை மாற்றி வைத்தால் அந்த அறையே புதியதுபோல் தோன்றும். நமக்கும் அந்த அறைக்குள் நுழையும்போது நல்ல உற்சாகம் ஏற்படும். ஆனால் கிச்சனில் உள்ள சாமான்களை மட்டும் மாற்றி வைக்கும்பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அவசரத்தில் காலை நேரத்தில் சமைக்கும் பொழுது குழப்பம் ஏற்பட்டு நேரம் செலவாகும். அதனால் கிச்சனில் உள்ள பொருட்களை அடுக்கும்போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதேபோல் உடுத்தாத துணிகள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது ரோட்டோரத்தில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களுக்கு துணிமணிகள் வேண்டி வாங்க வரும் மக்களிடம் கொடுக்கலாம்.
அவ்வப்பொழுது அக்கம் பக்கம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சிறிது நேரம் அமர்ந்து பேசுவதை கைக்கொண்டால் நிறைய அனுபவ அறிவை பெறலாம். அவர்களுக்கும் தனிமை சுமையாக இருக்காது.
தெரிந்த மொழியை, தெரிந்த தொழிலை, தெரிந்த டிப்ஸை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். அவர்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும். அதேபோல் அவர்கள் சொல்வதையும் கேட்டுக் கொள்ளலாம் .நமக்கு ஆபத்து நேரத்தில் கை கொடுக்கும்.
முக்கியமான செல்போன் நம்பர்களை மனப்பாடமாக வைத்திருப்பது நல்லது. எந்த நேரத்திலும் ஆபத்துக்கு உதவுவது அதுதான் சில நேரங்களில் செல்லை கூட தவற விட்டு விடுவோம். அப்பொழுது மனப்பாடம் செய்த நம்பர்தான் உறுதுணையாக இருக்கும்.
பாத்திரம் தேய்ப்பதில் இருந்து எல்லாமும் வேலைதான். ஆதலால் வீட்டு வேலை, ஆபீஸ் வேலை என்று எந்த துறையில் வேலை செய்தாலும் அது தொடர்பான புதிய தகவல்களை அறிய நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். அதற்கான புத்தகங்கள் படிப்பது, ஆன்லைன் கோர்ஸ் சேர்வது, ஆகியவற்றுக்காக பணத்தையும், நேரத்தையும் செலவழித்தால் அதனால் பலகோடி நன்மையை திரும்பப் பெறலாம்.
குடும்பத்தில் நடக்கும் முக்கியமான விசேஷம் தருணங்களில் அவர்கள் கூட இருக்க வேண்டும். அதுவே குடும்பத்தாருக்கு செய்யும் மரியாதை. குடும்பத்தினரிடம் ஒற்றுமையாக இருந்தால் வெளியில் எங்கு சென்றாலும் நிம்மதியாக சென்று பார்க்கலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நம் வீட்டு விசேஷங்களிலும் எல்லோரும் தூணாக துணை நிற்பார்கள். அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மன அழுத்தம் வரவே வராது.
இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். வீட்டு தோட்டத்தில் போதுமான அளவு நேரத்தை செலவிடலாம். இதனால் மனது புத்துணர்வு பெறும். உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும். குழந்தைகளுக்கு அங்கு வரும் பறவை, வண்டினங்களை சொல்லிக்கொடுத்தால் ஆர்வமுடன் தெரிந்து கொள்வார்கள்.
இதுபோல் மனதை லேசாக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய எளிமையான வழிகளை பின்பற்றினால் மகிழ்ச்சி தங்கும். செய்யும் வேலையை சிறப்பாக செய்யலாம். எல்லோருடனும் பிணக்கு இல்லாமல் இனிமையாக பழகி நல்ல பெயரை சம்பாதிக்கலாம்.