தீபாவளிப் பலகாரங்கள்: தரம் பார்த்து வாங்க வேண்டியதன் அவசியம்!
ஆரோக்கியமான பலகாரங்களை வீட்டிலேயே செய்து குழந்தைகளும், பெரியவர்களும் உண்ணலாம். செய்யத் தெரியாது அல்லது செய்வதற்கு நேரமில்லை என்றால் கடையில் வாங்கலாம். ஆனால் அப்படி வாங்கும்பொழுது மிகவும் கவனமாக, தரமான கடைகளிலிருந்து வாங்க வேண்டியது அவசியம்.
தீபாவளி என்றால் இனிப்பு இல்லாமலா? முன்பெல்லாம் 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் செய்யத் தொடங்கி விடுவார்கள். விதவிதமான பலகாரங்களை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி, பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாகவும், கூட்டுக்குடும்பங்கள் தொலைந்ததன் காரணமாகவும் பலகாரங்களை கடைகளில் ஆர்டர் செய்வது வழக்கமாகிவிட்டது.
பலகார கடைகளில் இனிப்பு அல்லது காரத்தை வாங்கும்பொழுது, நாம் வாங்க நினைக்கும் பலகாரத்தை சிறிது சுவைத்து பார்த்து வாங்க வேண்டும். அதில் சிக்கு வாடை வந்தாலோ, நிறமிகள் நாக்கில் அதிகம் படிந்தாலோ அவற்றை வாங்குவதை தவிர்த்துவிட வேண்டும்.
சுவையில் சிறிய வித்தியாசம் தெரிந்தாலும் அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களைவிட பேக்கிங் செய்யாமல் இருக்கும் பொருட்களை சுவைத்து பார்த்து வாங்குவது சிறந்தது.
தீபாவளி சமயங்களில் புதுப்புது கடைகள் முளைக்கும். பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற நிறுவனமா என்பதே உறுதிசெய்து வாங்குவது நல்லது. அத்துடன் பேக்கிங் செய்யப்பட்ட பலகாரங்களில் அதன் முழுமையான விவரம் - தயாரித்த தேதி, காலாவதி தேதி போன்றவை அச்சிடப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
விற்பனை செய்யும் இடங்களில் கையுறைகள், தலை உறைகள் அணிந்திருப்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். பால் பொருட்கள் விரைவில் கெட்டுவிடும். எனவே பாலில் செய்த இனிப்புகளை வாங்கும் பொழுது கவனம் அவசியம்.
நம்பகமான கடைகளில் மட்டுமே வாங்கவேண்டும். முடிந்தவரை வெள்ளி இழை இல்லாத இனிப்புகளை தேர்வு செய்வது நல்லது. உணவு பாதுகாப்பு துறையின் சான்று உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். அத்துடன் தரமான பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுகாதாரமான பேக்கிங் மிகவும் முக்கியம். செய்தித்தாள் அல்லது பாலிதீன் பைகளில் பலகாரங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பண்டிகையை கொண்டாட நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருக்கும் பொழுது, பழைய எண்ணெய் மற்றும் தரமற்ற பொருட்களை வைத்து பலகாரங்கள் செய்து அதை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதற்காக பலர் காத்திருக்கின்றனர். பண்டிகை நாட்களை குறிவைத்து நடைபெறும் இதுபோன்ற தரமற்ற உணவு மோசடியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள்:
அரசு அதிகாரிகளால் பண்டிகை நாட்களில் பலகாரங்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பல்வேறு வழிகாட்டு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை வேறு பலகாரங்கள் செய்ய பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும்.
சுத்தமான குடிநீரை கொண்டு பலகாரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பேக் செய்யக்கூடாது என்றும், இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கடைக்காரர்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!