தேவையானவை:
எண்ணெய் - தேவையான அளவு, கடலை மாவு - 200 கிராம், சாமை அரிசி மாவு - 100 கிராம், சர்க்கரை - 350 கிராம், மஞ்சல் கேசரி பொடி – சிறிது, நெய் 4 டீஸ்பூன், முந்திரி – 15, உலர் திராட்சை – 20, பால் – 2 டீஸ்பூன், லவங்கம் – 8, டைமண்ட் கல்கண்டு - 15, ஏலக்காய் – 5, பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை.
செய்முறை:
முதலில் பாகு தயாரிக்க வாணலியை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை அதில் சேர்த்து 50 மி.லி. நீர் விட்டு சூடாக்கிக் கிளரி விட்டுகொள்ளவும். பின்பு சர்க்கரை கலந்த நீர் கொதிக்கும்பொழுது அதனுடன் பாலை கலந்துகொள்ளவும். அதன்பின்பு இதனுடன் மஞ்சள் கேசரி கலர் பொடியையும் பாகுடன் சேர்த்து நன்றாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். பின்பு சாமை அரிசி மாவு மற்றும் கடலை மாவை எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜிக்கு மாவு தயார் செய்வதுபோல் கெட்டியாக தயார் செய்துகொள்ளுங்கள். பின்பு பூந்தி தயார் செய்ய ஆரம்பிக்கலாம். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிகொள்ளுங்கள். பின்பு எண்ணெய் சூடேறும்வரை காத்திருங்கள். எண்ணெய் சூடு ஏறியவுடன்
கண் கரண்டியை வாணலியின் மேல் வைத்து அதன் மேல் கடலை மாவை ஊற்றி பூந்தியாக எண்ணெயில் விழும்படி நன்றாக தேய்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக சிறிதுசிறிதாக கண் கரண்டியில் ஊற்றி பூந்தி பொரித்துக்கொள்ளுங்கள். பொரித்து எடுத்த பூந்தியை நாம் தயார் செய்து வைத்துள்ள பாகுடன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி இதனுடன் முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு வறுத்து எடுத்த பொருட்கள், ஏலக்காய், கற்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின்பு இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்துகொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் கலந்து அதன் பின்பு லட்டுபோல் தேவையான அளவு உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் தேவாமிர்தம்போல் ருசியாக இருக்கும் சட் சட் சாமை லட்டு லட்டு இனிதே தயாராகிவிட்டது.
தேவையானவை:
சோளமாவு மற்றும் அரிசி மாவு - 250 கிராம், - உப்பு - 5 கிராம், சர்க்கரை - 10 கிராம், எலுமிச்சை சாறு - 1 எண், தண்ணீர் - 130 மி.லி., வெண்ணெய் - 150 கிராம், எண்ணெய் - தேவைக்கேற்ப. மிளகுத்தூள் - 1 எண். தக்காளி - 2 எண்கள். - மிளகாய் தூள் - ½ டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - ¼ டீஸ்பூன், உப்பு - சுவைக்க. பன்னீர் - 200 கிராம், கரம் மசாலா - 1 சிட்டிகை, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, வேகவைத்த சோளம் சிறிதளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து, கெட்டியான மாவாக செய்து, 15 கிராம் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். தடிமனான தாளில் மாவை ½ அங்குலமாக உருட்டி, தாளின் ¾ பகுதி வரை வெண்ணெய் தடவி, உலர்ந்த மாவைத் தூவி, உறைபோல் மடியுங்கள். தாளை எடுத்து தட்டில் வைக்கவும், ஈரமான துணியால் மூடி, குளிர்சாதன பெட்டியில் 20 நிமிடங்கள் வைக்கவும், அதே செயல்முறையை 2 முறை செய்யவும். இப்போது ட்ரேயை எடுத்து தாளில் வெண்ணெய் தடவி புத்தகம் போல் மடித்து ஈரத்துணியால் மூடி 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஸ்டஃபிங்கிற்கு: ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிளகுத்தூள், தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஒரு சிட்டிகை கரம்மசாலா, மஞ்சள் தூள், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, பன்னீர் துண்டுகள், வேகவைத்த சோளம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தீயை அணைக்கவும். மாவிலிருந்து தேவையான துண்டை வெட்டி, உலர்ந்த மாவைப் பயன்படுத்தி மெல்லிய தாளில் உருட்டி நான்கு சதுரங்களாக வெட்டி ஒரு ஸ்பூன் கலவையில் போட்டு, பின்னர் தண்ணீரை விளிம்புகளில் தடவி விளிம்புகளை ஒன்றாக அழுத்தவும். பஃப்ஸை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான சோள பன்னீர் பப்ஸ் ரெடி
- எஸ். செல்வமணி