புரோட்டீன் ராண்ட்யூர் & நூதன மிக்சர்!

ஸ்வீட் காரம் பட்சணம் போட்டி பரிசு பெறும் ரெசிபிக்கள்!
Sweet Karam Batchanam Recipes 9
Sweet Karam Batchanam Recipes 9

புரொட்டின் ராண்ட்யூர்! 

தேவையானவை:

நல்ல தரமான இனிப்பு பிஸ்கட் – 12, கோதுமை மாவு - 100 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெள்ளை எள் - 50 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், நன்கு முற்றிய தேங்காய் - ஒரு மூடி, பால் பவுடர் - 100 கிராம், திக்கான பால் - 100 மில்லி, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் தலா – 10, நாட்டுச் சர்க்கரை – 200 கிராம்.

செய்முறை:

கோதுமை மாவை ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பாசிப்பருப்பு, எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். தேங்காயை துருவி அதையும் நன்கு வெறும் வாணலியில் வறுத்து வைத்துக்கொள்ளவும். பால் பவுடரை பாலில் கலந்து கோவாவாக காய்ச்சவும். இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் கிண்டிவிடும் என்பதால் கவனமாக கிளறவும். ஆறிய பிறகு உதிர்த்து வைத்துக்கொள்ளவும். முதலில் பிஸ்கட்டை மிக்ஸியில் நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்த பாசிப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், வறுத்த தேங்காய் துருவல் எல்லாவற்றையும் தனித்தனியாக நைசாக மிக்ஸியில் அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு வகைகள், பிஸ்கட் பொடி, உதிர்த்த பால்கோவா, தேங்காய் பொடி நாட்டு சர்க்கரை, வாசனைக்கு ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் சேர்க்கவும். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை ஒடித்து கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்கவும். கையால் நன்றாக கலந்துவிட்டு உருண்டைகளாக பிடிக்கவும். எள், வேர்க்கடலை, பால்கோவா இவற்றிலேயே நிறைய நெய் பிசுக்கு இருப்பதால் தனியாக நெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் உருக்கிய நெய் சேர்த்துக்கொள்ளலாம். பிஸ்கட், தேங்காய் பொடி சேர்த்து இருப்பதால் ஒரு தனி சுவையுடன் நன்றாக இருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருக்காமல் செலவழிக்கவும். மேற்சொன்ன அளவிற்கு சுமார் 25 உருண்டைகள் பிடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கற்றாழை அல்வா & ராகி பக்கோடா!
Sweet Karam Batchanam Recipes 9

நூதன மிக்சர்!

தேவையானவை:

பாசிப்பருப்பு - அரை கிலோ, அரிசி பொரி (இதை முட்டை பொரி என்றும் சொல்வார்கள்) - ஒரு பெரிய பாக்கெட். (கால் கிலோ), வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், அவல் - 150 கிராம், கார்ன்ஃப்ளேக்ஸ் - 100 கிராம், உளுந்து அப்பளம் – ஐந்து, மைதா - 100 கிராம், ரவை - 100 கிராம். பொரிக்க - எண்ணெய் அரை கிலோ, உப்பு ,காரப்பொடி, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை -  தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை மிக்ஸியில் அல்லது மிஷினிலோ மிகவும் நைசாக அரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அரைத்தால் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு மாவில் தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி பெருங்காயப்பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து, பூந்தி மாவு பதத்திற்கு கரைத்து பூந்தி பொரித்துக்கொள்ளவும். மைதா மாவு ரவை இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக பிசைந்து ரொட்டிக் கல்லில் இட்டு டைமண்ட் ஆக கட் செய்து பொரித்துக்கொள்ளவும். அவல் கார்ன்ஃபிளேக்ஸை இரண்டையும் எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும் . அப்பளங்களையும் பொரித்துக்கொள்ளவும். அரிசி பொரியை வெறும் வாணலியில் ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு உப்பு, காரம் சேர்த்து நிதானமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரி, கார்ன் பிளேக்ஸ், அவல் எல்லாவற்றையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போடவும். பொரித்த அப்பளங்களை நொறுக்கிப் போடவும் நன்றாக கலக்கவும். இரண்டு ஸ்பூன் எண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை பொரித்து தேவையான அளவு உப்பு, காரப்பொடி சேர்த்து கலக்கவும். மேலும் பிடித்தமானால் வறுத்த முந்திரி, பாதாம் சேர்க்கலாம். (பாசிப்பருப்பு மாவு பூந்தி நமுத்து போகாது.) சுவையான நூதனமான மிக்சர் தயார்.

- சுதா திருநாராயணன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com