
தேவையானவை:
கம்பு, மக்காச்சோளம் - தலா 1 கப், பொடித்த வெல்லம் - 1½ கப், நெய் - ½ கப், ஏலக்காய்த்தூள் - ½ டீஸ்பூன், முந்திரி அலங்கரிக்க கொஞ்சம்.
செய்முறை:
கம்பு, சோளம் இரண்டையும் இரண்டுமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நன்கு மாவாக அரைத்து, தோசைமாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். ஒரு அடி கனமான வாணலியில், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்துவிட்டு,
அதே வாணலியில் வெல்லம் சேர்த்து ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இளம்பாகு வரும்போது கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும். கிளறும்போதே ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக்கிளறவும். அல்வா பதம் மாறி சுருள வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே முந்திரி துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். ஆறியதும் துண்டுகள் போலவும். சுவையான சத்தான பஜாமா பர்ஃபி தயார்.
தேவையானவை:
கேரட் - 2, பீட்ரூட் - 1, உருளைக் கிழங்கு - 2, வேர்க்கடலை ¼ கப், கருவேப்பிலை 2 இணுக்கு, பூண்டு பற்கள் - 3, மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
செய்முறை:
காய்களைக் கழுவி தோல் நீக்கி கேரட் துருவல் கட்டையில், பெரிய கண் உள்ளதில் நீள வாக்கில், (கேரட்டை மட்டும் விரல் நீள துண்டுகளாக நறுக்கி) சீவவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயைக் குறைத்து முதலில் உருளைக்கிழங்கு சீவலைப் போட்டு, அதில் சிறிது உப்புநீர் தெளிக்கவும். சீவல் பொன்னிறமானதும் எடுக்கவும். இதேபோல், கேரட், பீட்ரூட் சீவல்களையும் பொரித்து எடுத்தபின், வேர்க்கடலையைப் போட்டு சிவந்ததும் எடுத்தபின் கருவேப்பிலையையும், நசுக்கிய பூண்டையும் பொரித்து எடுக்கவும். ஒரு பவுலில் அனைத்தையும் போட்டு மிளகாய்த்தூள் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். வெஜ் மிக்ஸர் ரெடி.
- இந்திராணி பொன்னுசாமி