
தேவையானவை: பச்சரிசி மாவு – 1 கப், துவரம் பருப்பு – 3 ஸ்பூன், வறுத்த நிலக்கடலை பருப்பு – 4 ஸ்பூன், முந்திரி பருப்பு - 10, வெல்லம் - ½ கிலோ, தேங்காய் – 1, நெய் - ¼ கப், ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்.
செய்முறை: முதலில் தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை அரை வேக்காடு வேகவைக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி வைக்கவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுக்கவும். அடி கனமுள்ள பெரிய வாணலியில் தேங்காய் பால் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும். கொதித்து வரும்போது, வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கனமுள்ள கரண்டியால் கலந்துவிடவும். பின் வடிகட்டி வைத்த வெல்லத் தண்ணீரை சேர்த்து கிண்டவும். பின் மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி, தேங்காய் பாலுடன் சேர்த்து கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும். சிறு தீயில் ½ மணிநேரம் கிண்டவும். பின் பாதி நெய்யை ஊற்றி கிளறவும். பின் நிலக்கடலை பருப்பு, முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் இவற்றை போட்டு நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து மாவு சட்டியில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பக்குவத்தில் வந்ததும் மீதி நெய்யை ஊற்றி, கிளறி தீயை அணைத்துவிட்டு அல்வாவின் மீது கரண்டியால் தேய்த்துவிட வேண்டும். பின்னர் ஒரு விரிந்த தட்டை எடுத்து அதில் நெய் தடவிய அல்வாவை தட்டி சமன் செய்து ½ மணி நேரம் ஆறவிட்டு கத்தியால் சிறு வில்லைகளாக வெட்டி எடுக்கவும். மிகவும் சுவையான, சத்தான அல்வா ரெடியாகிவிட்டது.
தேவையானவை: சர்க்கரை வள்ளி கிழங்கு - ½ கிலோ, சின்ன வெங்காயம் - 20, கோதுமை மாவு - ¾ கப், அரிசி மாவு - 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை - 2 கீற்று, தேங்காய் துருவல் - ½ கப், கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன், கடுகு - ½ ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ½ லிட்டர், சோடா உப்பு - ½ ஸ்பூன், பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: முதலில் கிழங்கை தோல் சீவி சீவலில் துருவிக்கொள்ளவும். வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை இவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெட்டி வைத்த வெங்காயம், மிளகாய், காயம், தேங்காய் துருவல் முதலியவற்றை போட்டு வதக்கி இறக்கிவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அத்துடன் அரிசி மாவு, சர்க்கரைவள்ளி கிழங்கு துருவல், உப்பு, சோடா உப்பு கலந்து அத்துடன் வதக்கி இறக்கி வைத்த வெங்காயம் சேர்ந்த பொருட்களை போட்டு நன்கு விரவி சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மாலை நேரத்தில் டீயுடன் சர்க்கரை வள்ளி கிழங்கு கார வடையை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- வி.கலைமதி சிவகுரு