
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், கேரட் - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், சன் பிளவர் ஆயில் - 100 கிராம், நெய் - 100 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேரட்டை நன்றாக கழுவி, பொடிதாக சீவி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சர்க்கரையை போட்டு பாகாக காய்ச்ச வேண்டும். அந்தப் பாகுடன் கேரட் விழுதை கலந்து கூடவே நெய் ஏலக்காய் பொடியையும் எண்ணெய்யையும் சேர்த்து சிறிதுசிறிதாக சேர்த்து நன்றாக கிளறவேண்டும். கிளறியதும் கேரட் கலவை நன்றாக சேர்ந்து திரண்டு வரும்பொழுது அடுப்பை அணைத்து விடவேண்டும். பிறகு ஒரு தாம்பாளத்தில் நெய் தடவி கேரட் மைசூர் பாகை அதில் போட்டு, நன்றாக அகலமாக பரப்ப வேண்டும். மேலே வெள்ளரி விதையை தூவ வேண்டும். ஒரு கத்தியால் சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
தேவையானவை: அரிசி மாவு - 100 கிராம், உளுத்தம் பருப்பு மாவு - ஒரு கரண்டி, மிளகாய் பொடி - 25 கிராம், சீரகம் - இரண்டு ஸ்பூன், வெண்ணெய் - 25 கிராம், உப்பு, எண்ணெய் – தேவையானது.
செய்முறை: வாணலியில் தேவையான தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து மிளகாய்த்தூள், சீரகம், உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கொதித்து வரும்போது வெண்ணையை அதில் போட வேண்டும். வெண்ணைய் முழுவதும் உருகியதும் அரிசி மாவையும் உளுத்தமாவையும் சிறிதுசிறிதாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு அரிசி மாவு வெந்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மாவை கையிலெத்துச் சிறிது தண்ணீர் தொட்டு நீளமாக உருட்டவேண்டும். உருட்டிய பிறகு ஒரு வெள்ளைத் துணியில் சிறு சிறு அளவு வட்டமாக கையால் விட வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் குட்டி குட்டி முறுக்குகளை போடவேண்டும். நன்றாக சிவந்ததும் எடுக்கவேண்டும். முறுக்கு கலையாமல் இருக்க அடுப்பு ஓரளவு தீயில் எரியவேண்டும். குட்டி கார முறுக்கு ரெடியாகிவிடும்.
- ஆர். ஜெயலக்ஷ்மி