
தேவையானவை: மைதா - 1 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
பூரணம் செய்ய தேவையானவை: நிலக்கடலை, முந்திரி, பாதாம், பேரீச்சம் பழம் எல்லாம் சேர்த்து - 2 கப், பொடித்த வெல்லம் - 1 கப், ஏலக்காய் – 4, நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: மைதா மாவில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பூரணம் செய்ய மேலே கூறிய பருப்புகள், பேரீச்சம் பழங்களை ½ மணி நேரம் ஊறவைத்து, கெட்டியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிய பின், அரைத்த நட்ஸ் விழுது, நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக கிளறிக்கொள்ளவும். போளி மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் ஒரு சிறு உருண்டை பூரணத்தை வைத்து சப்பாத்தி போல் தட்டிக்கொள்ளவும். தோசை சட்டியில் நெய் ஊற்றி தட்டிய போளியைப் போட்டு இரு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். பண்டிகை காலத்திற்கேற்ற ரிச் போளி ரெடி.
தேவையானவை: தினை அரிசி - 2 கப், மிளகு - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் சிறிது நேரம் வெயிலில் காயவைத்து, ஈரப்பதம் போனவுடன் மிக்ஸியில் அரைத்து, மாவை சலித்து வைத்துக்கொள்ளவும். மிளகுத் தூள், உப்புடன் சிறிது சுடு தண்ணீர், 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். எண்ணெயை காய வைத்து, சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும். தினை அரிசியில் வித்தியாசமான சுவையான சேவு ரெடி.
- என். பாக்கியலட்சுமி