சோள பணியாரம் & மொறு மொறு தினை பக்கோடா!
சோள பணியாரம்!
தேவையானவை:
வெள்ளை சோளம் - ½ கப், இட்லி அரிசி - ½ கப், பச்சரிசி - ¼ கப், உளுந்து - ¼ கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 1 கப், ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு நாலு மணி நேரம் ஊறவைத்த வெள்ளை சோளம், அரிசி(சேர்ந்து போட்டு ஊறவைக்கவும்), வெந்தயம் உளுந்தை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்து எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லப்பாகு எடுத்துகொள்ளவும். அரைத்த மாவுடன் வெல்ல பாகை கலந்துகொள்ளவும். பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் பணியாரக் கல்லை சூடாக்கி, குழியில் துளி எண்ணெய்விட்டு மாவை எடுத்து பணியாரங்களாக ஊற்றவும். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிவிட்டு, மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான சத்தான இனிப்பான சோள பணியாரம் ரெடி!
மொறு மொறு திணை பக்கோடா!
தேவையானவை:
தினை மாவு - 1 கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பெரிய வெங்காயம் – 4, கறிவேப்பிலை - 4 கொத்து, இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் – 3, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
தினை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யைச் சுடவைத்து அதில் ஊற்றி, கரண்டியால் கிளறுங்கள். அதில் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையுங்கள். மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். அப்போதுதான் பக்கோடா மொறுமொறுவென்று இருக்கும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், மாவைக் கையால் உதிர்த்துவிடுங்கள். பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள். சுவையான மொறு மொறு திணை பக்கோடா ரெடி.
- குணசீலா. வி