
தேவையானவை: கேரட் துருவல் - 1 கப், தேங்காய் துருவல்- 1 கப், சர்க்கரை - 1 கப், பால் - ¼ கப், ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன். அலங்கரிக்க: முந்திரி துண்டுகள். .
செய்முறை: கேரட் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து பாலை ஊற்றி கொதித்து வரும்போது சர்க்கரையை சேர்த்து கரைந்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். ஒன்றுசேர்த்து கிளறி பக்கங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும்வரை விட்டு நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்செய்து முந்திரி பருப்பு துண்டுகள் கொண்டு அழகாக பதித்துவிடவும். பாதி ஆறியதும் துண்டுகள் கட் செய்யவும். நன்கு ஆறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான நிறத்தில் கேக் மிளிரும். செய்வதும் சுலபம். சத்தான இனிப்பாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை: அரிசிமாவு - 2 கப், பொட்டுக் கடலை மாவு - ½ கப், சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், ஜீரகம் - ½ ஸ்பூன், எள் - ½ ஸ்பூன், ஓமம் - ½ ஸ்பூன், சூடு படுத்திய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையானது.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டு கடலை மாவு, உப்பு, ஜீரகம், எள், ஓமம், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து, அதில் சூடான எண்ணெய் ஊற்றி பரவலாக பிசறி விட்டு சிறிதுசிறிதாக தண்ணீர் சேர்த்து, பிசைந்து வைக்கவும். மிகவும் அழுத்தி பிசையகூடாது. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு ஸ்டார் அச்சு (முள் முறுக்கு) போட்டு சிறிய அளவில் முறுக்குகளாக பிழிந்து போட்டுஎடுத்தால் கரகரப்பாக, நல்ல காரசாரமான சக்லி தயார்.
- கிரிஜா கண்ணன்