
தேவையானவை:
மைதா - ஒரு கப், சக்கரை சேர்க்காத கோவா – அரைக் கப், சமையல் சோடா- சிட்டிகை, வெண்ணெய் - நான்கு டீஸ்பூன், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு, வெள்ளரி விதை, முலாம்பழ விதை - தலா 50 கிராம், பால் – சிறிதளவு, சர்க்கரை - 2 கப்.
செய்முறை:
மைதாவுடன் சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்கு சலிக்கவும். அதனுடன் வெண்ணெய் கோவா சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பாலை தெளித்து பிசையவும். (பிறந்த குழந்தையின் மேனியை தொடுவது போல்) (அழுத்தம் வேண்டாம். விரல்களால் மட்டுமே பிசையவேண்டும் (மாவு அப்போதுதான் மிருதுவாக இருக்கும்). (மக்கன் பேடா சாப்பிடணும்னா சும்மாவா பாஸ்). பிறகு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி சின்ன கிண்ணம்போல் செய்யவும். அதில் வெள்ளரி மற்றும் முலாம் பழ விதைகளை பொடித்து போட்டு மூடி நீள் வாக்கில் உருண்டைகளாக்கி, மிதமாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையுடன் இரண்டு கப் நீர் சேர்த்து காய்ச்சி ஒரு கம்பி பதம் பாகானதும் இறக்கி அதில் பொரித்த மக்கன்பேடாக்களை போட்டு ஊறவிடவும். நன்கு ஊறி உப்பியதும் மேலே சிறிதளவு பாகு ஊற்றி பரிமாறவும். சுவையில் அசத்தும் இந்த மக்கன்பேடா இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கச் சொல்லும்.
தேவையானவை:
பொட்டுக்கடலை, கொள்ளு அவல், வறுத்த பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், ஓமம், அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனி மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து உலர்த்தி பொரித்துக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், தேவையான உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்துகொள்ளவும். அவல், கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அகலமான பேசினில் பொரித்த கொள்ளு, கடலைப்பருப்பு பொட்டுக்கடலை, வறுத்த பாதாம், முந்திரி, வேர்க்கடலை, காராபூந்தி, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், வறுத்த கறிவேப்பிலை, ஓமப்பொடி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க... சத்துக்கள் நிறைந்த புரோட்டின் மிக்சர் ரெடி.
- ஆதிரை வேணுகோபால்