தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எந்த வகையான இனிப்புகள், காரம் செய்யலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது! அந்த வகையில் இந்த தீபாவளிக்கு மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த இனிப்பு வகைகளை ட்ரை பண்ணி பாருங்க!
கோதுமை பாதுஷா :
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு-2 கப்
சர்க்கரை- 2 கப்
நெய் -2 டேபிள்ஸ்பூன்
தயிர் -3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனோடு பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு , 2 ஸ்பூன் சர்க்கரை, நெய், மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை நைசாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த மாவை 1 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை 2 கப் தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டும் அளவுக்கு சர்க்கரை பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாதுஷா வடிவத்தில் திரட்டி மிதமான சூட்டில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த சூடான பாதுஷாவை சர்க்கரைப்பாகில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் சுவையான கோதுமை பாதுஷா ரெடி!
ரவை பர்பி :
தேவையான பொருள்கள் :
ரவை-1 1/2 கப்
சர்க்கரை- 1 கப்
நெய் - 1/2 கப்
கடலை மாவு -3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 /2 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர்-3 டேபிள் ஸ்பூன்
பாதாம் மற்றும் பிஸ்தா- தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நெய் நன்கு உருகியதும் அதனுடன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து விடவும். கடலைமாவின் பச்சை வாசனை போனவுடன், அதனோடு நைசான ரவையை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சம அளவில் எடுத்து கையில் ஒட்டும் பதத்திற்கு சர்க்கரை பாகு தயார் செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த சூடான சர்க்கரைப் பாகினை வறுத்து வைத்த ரவையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கலந்து விடவும். பின் இதனோடு பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலந்து ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இதனை நெய் தடவிய ஒரு ட்ரேயில் ஊற்றி, இதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா தூவி, ஒரு கரண்டியை வைத்து நன்கு அழுத்தி விடவும். இதனை அப்படியே மூன்று மணி நேரம் ஆற வைத்து பிடித்த வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான ரவை பர்பி ரெடி!