உங்க வீட்ல சமையல் ருசிக்கனுமா? இதோ சில எளிய குறிப்புகள்!

இட்லி ..
இட்லி ..

எது செய்தாலும் ஈடுபாடுடன் செய்ய வேண்டும். அதுவும் நம் குடும்பத்திற்காக சமைக்கும்பொழுது அன்பு, அக்கறை எடுத்து சமைத்தால் தானாகவே ருசி கூடிவிடும். சமையல் ருசியாக இருக்க சில குறிப்புகள்:

உங்கள் வீட்டில் வார்க்கும் இட்லி மட்டும் புசுபுசுவென்று ரொம்ப மென்மையாக இருக்கிறதே எப்படி என்று கேட்டால் அதற்கான ரகசியம் இட்லிக்கு நனைக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் அவல் சேர்த்து ஊற வைத்து அரைப்பதுதான்.

தோசை பொன் கலரில் நன்கு சிவந்து மொறுமொறுப் பாகவும் வருகிறதே எப்படி என்றால் பெரிய ரகசியம் ஒன்றுமில்லைங்க. தோசை வார்க்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவையும் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வார்க்க வேண்டியதுதான்.

ரவா தோசை
ரவா தோசை

ரவா தோசை ஹோட்டலில் தருவது போல் சிறு சிறு ஓட்டைகள் விழுந்து பார்க்கவும், சுவைக்க ருசியாகவும் இருக்க ரவை ஒரு கப், அரிசி மாவு 1/4 கப், மைதா மாவு 1/4 கப், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை பொடியாக நறுக்கியது, தேவையான உப்பு ஒரு ஸ்பூன் சக்கரை கலந்து நீர்க்கக் கரைத்து வார்க்க வேண்டியதுதான்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது நன்கு குழைவாகவும், ருசியாகவும் இருக்க கடைசியாக ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து கிளறவும்.

எந்த குருமா செய்தாலும் அதற்கு பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சிறிது நெய்யில் வறுத்து காய்களை போட்டு வெந்து இறக்கும் சமயம் கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க ருசியாக இருக்கும்.

மணக்க மணக்க ரசம் இருக்க வேண்டுமானால் ரசம் செய்து இறக்கியதும் இரண்டு ஸ்பூன் நெய்யில் கடுகு, கருவேப்பிலை, மிளகு பொடி, சீரகம் சேர்த்து தாளித்து சிறு கட்டி வெல்லமும் சேர்க்க மிகவும் ருசியான ரசம் தயார்.

ரசம்...
ரசம்...Image credit p youtube.com

அதிகம் எண்ணெய் குடிக்காத வடை செய்ய ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அரைத்த உளுந்து மாவுடன் சேர்த்து கலந்து செய்ய புசு புசுவென்றும் மொறுமொறுப்பாகவும் வரும்.

எந்த பொரியல் செய்தாலும் அதை இறக்கும் சமயம் தேங்காய்த் துருவல், சிறிது மிளகு பொடி, சீரகப்பொடி, 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து இறக்க ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அக்னி நட்சத்திர வெயிலுக்கு இயற்கையான சில அழகு டிப்ஸ்கள்!
இட்லி ..

தினமும் ஒரே மாதிரி சாம்பார் செய்யாமல் தனியா ஒரு ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன், மிளகாய் ரெண்டு, மிளகு அரை ஸ்பூன், துவரம் பருப்பு ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது சேர்த்து வறுத்து அரைத்து சாம்பார் செய்ய மணமான ருசியான சாம்பார் தயார். 

தினம் தினம் சாம்பார் ரசம் பொரியல் என ஒரே மாதிரி செய்யாமல் ஒரு நாள் மோர் குழம்பு, பருப்புசிலி மறுநாள் துவையல், கூட்டு, பச்சடி என்றும், அதற்கு அடுத்த நாள் வத்தக்குழம்பு, மெழுகு பிரட்டல், சுட்ட அப்பளம், பொரிச்ச கூட்டு, நான்காம் நாள் சாம்பார், பொரியல், ஐந்தாம் நாள் பொரிச்ச குழம்பு, புளிவிட்டை கீரை என வெரைட்டி காட்ட அனைவரும் விரும்பி உண்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com