நம் முன்னோர்கள் அவர்கள் காலத்தில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ஒரு சில வகை எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதுவும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் வேர்க்கடலை, எள் போன்ற விதைகளை மரச்செக்கில் போட்டு குளிர் அழுத்த (cold pressed) முறையில் தயாரித்து உபயோகித்து வந்தனர். எனவே அவை கலப்படமின்றியும் ஆரோக்கியமான தாகவும் இருந்தன.
தற்காலத்திலோ சன்ஃபிளவர் ஆயில், ரைஸ் பிரான் ஆயில், சோயா பீன் ஆயில், கார்ன் ஆயில், அவகாடோ ஆயில் என பல வகை எண்ணெய்கள் உள்ளூர் தயாரிப்பாகவும், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மார்க்கெட்டில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், சமையலுக்கு உகந்ததாகவும் கருதப்படும் 6 வகை எண்ணெய்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆலிவ் ஆயில்: இதில் மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், உடலுக்கு தேவைப்படும் நல்ல கொழுப்பின் (HDL) அளவைக் கூட்டவும் உதவும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் எனப்படும் இதன் இன்னொரு வகையில் ஆரோக்கிய நன்மைகள் இன்னும் அதிகம் உண்டு.
2. கனோலா ஆயில்: இதில் சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவு குறைவாகவும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாகவும் உள்ளன. இதிலுள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி புரிகின்றன.
3. ஃபிளாக்ஸ் சீட் ஆயில்: இந்த எண்ணெயில் ஆல்ஃபா லினோலெனிக் (ALA) என்றொரு அமிலம் உள்ளது. இது ஒரு வகை ஒமேகா - 3 கொழுப்பு அமில வகையைச் சேர்ந்தது. இது உடலிலுள்ள வீக்கங்களைக் குறைக்கவும், உடலுக்குத் தேவைப்படும் நல்ல கொழுப்பின் அளவைக் கூட்டவும் உதவும்.
4. வால்நட் ஆயில்: இதில் ஒமேகா - 3 மற்றும் ஒமேகா - 6
கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை நல்ல கொழுப்பின் அளவைக் கூட்டவும் அதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
5.நல்லெண்ணெய்: எள் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் சீசமோல் (Sesamol), சீசமின் (Sesamin) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அடங்கியுள்ளன. இவை உடலின் நல்ல கொழுப்புகளின் அளவைக் கூட்ட உதவி புரிபவை.
6. சன் ஃபிளவர் ஆயில்: இந்த எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
ஆரோக்கியம் நிறைந்த ஆயில்களைப் பயன்படுத்தி சமையலில் சுவையையும் நற்பயன்களையும் கூட்டுவோம்.