
பதநீர் எடுக்கும் முறை: பனை மரத்தில் பதநீர் கிடைக்கும் காலம் ஜனவரி முதல் ஜூன் வரை. பனை மரத்தில் இருந்து வரும் பாளையை முழுவதுமாக வளரவிட்டால் அதில் இருந்து கிடைப்பதுதான் நுங்கு. அந்த பாளையை வளரவிடாமல் புதிதாக தோன்றிய பாளையை நுனியில் மென்மையாக சீவிவிட்டு அதில் ஒரு பெரிய மர இடுக்கி கொண்டு லேசாக இடுக்கி விடுவார்கள். பிறகு ஒரு கலயத்தில் சுண்ணாம்பைத் தடவி அதை கட்டி வைத்துவிட்டால் பாளையிலிருந்து பதநீர் கசிந்து சொட்டு சொட்டாக கலயத்தில் சேரும். பின்பு அதை மறுநாள் எடுத்தால் பதநீர் கிடைத்து விடும். அதை குடிக்கலாம், காய்ச்சி கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கலாம்.
மனிதருக்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும், தேனிகளுக்கும், எறும்பு களுக்கும், வண்டுகளுக்கும் சிறந்த பானம். சுத்தம், சுகாதாரம் பார்ப்பவர்கள் மரத்திலிருந்து இறங்கிவரும் வேளையில் கலயத்தை பார்க்கக்கூடாது.
அவ்வளவு எறும்புகள், வண்டுகள், பாளையின் துரும்புககள் எல்லாம் கிடக்கும். கலயத்தில் உள்ள சுண்ணாம்பு ஈஸ்டை பெருகவிடாமல் செய்கிறது. சுண்ணாம்பு தடவிய கலயத்தில் உள்ள பதநீரை, பனை ஓலையை பட்டையாக செய்து அதில் ஊற்றி குடிக்கும்போது அதன் ருசியே தனிதான்.
கருப்பட்டி தயாரிக்கும் முறை: பதனீரை நெருப்பில் விறகு வைத்து நன்றாக பல மணி நேரமாக காய்க்கும் போது கருப்பட்டி கிடைக்கிறது. கிராமங்களில் முற்காலத்தில் வீடுகளில் பதநீரை காய்ச்சி தனி பாகு பக்குவம் வந்தவுடன் 10 க்கும் மேற்பட்ட தேங்காய் சிரட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து நல்ல ஆற்று மண்ணை விரித்து அதை அடுக்குவார்கள். பின்னர் பாகு பக்குவமாக திடநிலையில் வந்ததும் சிரட்டைகளில் முக்கால் பாகம் வரை ஊற்றி அப்படியே வைத்து விட்டு மறுநாள் நன்கு காய்ந்த பிறகு தட்டி எடுப்பார்கள். அது தான். உண்மையான சுவையான கருப்பட்டி.
அந்த காலத்தில் கருப்பட்டி பத்தாயம் நிறைய வீடுகளில் உண்டு. இந்த பதனீர் கிடைக்கும் காலங்களில் இந்த கருப்பட்டியை செய்து பத்தாயங்களில் சேகரித்து விடுவார்கள். கருப்பட்டி காபி இல்லாத வீடே இருக்காது. காபி அடுப்பில் காயும்போதே ஒரு மணம் வருமே பார்க்கலாம்! சுவைத்து மகிழ்ந்த காலம் அது.
சுக்கு கருப்பட்டி தயாரிக்கும் முறை: பனங்கருப்பட்டி தயாரிக்கும் முறையில் 80 லிட்டர் பதனீர் கொதிக்கும் போது 200 கிராம் சுக்கு, 75 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிலி ஆகியவற்றை பொடித்த கலவையை போட்டு கலக்கி கொதிக்க வைக்கவேண்டும். பிறகு கருப்பட்டி ஊற்றுவது போலவேதான்.
பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை: 100 லிட்டர் பதனீரை கொப்பரையில் ஊற்றி 100° வெப்பத்தில் கொதிக்க வைக்கவேண்டும். அடுப்பில் இருந்து இறக்கிய கொப்பரையை மூடி நிலத்துக்கடியில் புதைக்க வேண்டும். 40 நாள் கழித்து கொப்பரையை வெளியே எடுத்தால் உள்ளே பதநீர் பனங்கற்கண்டாக மாறியிருக்கும் பதநீரை பயன்படுத்தி தயாரிக்கும்போது 100 லிட்டர் பதநீருக்கு 5 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும்.