ஹரி மிர்ச்சி கா ஆச்சார் என்பது ஓர் உப்பு காரம் நிறைந்த ஸ்பைஸி சைட் டிஷ். இது பச்சை மிளகாய், கடுகு எண்ணெய், வினிகர் மற்றும் ஸ்பைசஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு. பார்த்த உடனே நாவில் நீர் ஊறச் செய்யும் அட்டகாசமான டிஷ். ரைஸ் மற்றும் ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. இதைத் தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1.பச்சை மிளகாய் 10
2.சீரகம் 1 டீஸ்பூன்
3.கடுகு 2 டீஸ்பூன்
4.கொத்தமல்லி விதை 1 டீஸ்பூன்
5. வெந்தயம் ¼ டீஸ்பூன்
6.பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
7.ஓமம் ½ டீஸ்பூன்
8.மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
9.லெமன் 1
10. கடுகு எண்ணெய் ¼ கப்
11.பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
12.வினிகர் 2 டேபிள்ஸ்பூன்
13.உப்பு தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். சீரகம், கடுகு, மல்லி விதை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம் ஆகியவற்றை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். பின் அதை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பான பவுடராக்கிக்கொள்ளவும். அந்தப் பவுடரை பச்சை மிளகாயுடன் சேர்த்துக் கலந்து விடவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், லெமன் ஜுஸையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கடாயில் கடுகு எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் பெருங்காயத் தூளை சேர்த்து, சிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். அந்த எண்ணெய் நன்கு குளிர்ச்சி அடைந்ததும் அதை பச்சை மிளகாய் கலவையில் கொட்டவும். பின் அதில் வினிகரை சேர்த்து அனைத்துப் பொருள்களையும் மேலும் கீழுமாக ஒன்று சேருமாறு கலக்கவும். இப்பொழுது பச்சை மிளகாய் ஊறுகாய் என தமிழில் அழைக்கப்படும் "ஹரி மிர்ச்சி கா ஆச்சார்" தயார். இரண்டு நாள் சூரிய ஒளியில் வைத்து எடுத்து தயிர் சாதம் மற்றும் ரொட்டி போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்ண நிமிஷத்தில் சாப்பாட்டை முடித்துக் கொள்ளலாம்!
பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் C உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கேப்ஸைசின் என்ற பொருள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இரத்த ஓட்டம் சீராகவும் உதவும். எனவே இந்த சைட் டிஷ்ஷை அனைவரும் வீட்டில் தயாரித்து உபயோகித்து வரலாம்.