
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பரந்து விரிந்து கிடக்கும் பண்டல்கண்ட் எனப்படும் கிராம மக்களின் பாரம்பரிய உணவுதான் மஹுவா டோப்ரி. சக்தியின் உறைவிடம் என்று போற்றப்படும் இந்த உணவு, சாதாரண மஹுவா எனப்படும் காட்டுப் பூக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பாலுடன் சேர்த்து இந்த உணவை உட்கொள்ளும் கிராம மக்கள்,
"உடலின் உள்ளும் புறமும் ஒருசேர சக்திபெற உதவி புரிகிறது இந்த உணவு. இது, ஆயுர்வேதத்திலும் சக்தியை மீட்டெடுக்க உதவும் ஓர் அற்புதமான உணவு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது" என்கின்றனர்.
பண்டல்கண்ட் கிராமத்துப் பெரியவர்கள், வீக் (weak)காக இருக்கும் சிறுவர் சிறுமிகளை தினமும் தொடர்ந்து மஹுவா டோப்ரி சாப்பிடும்படி அறிவுறுத்துவதுண்டு. நவீன கால உணவியல் முறையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்திற்கு பலர் மாறிவிட்டபோதும், சட்டர்புர் மாவட்ட மற்றும் மத்தியப் பிரதேச மாநில மக்கள் இன்றும் மஹுவா டோப்ரியை ஒரு விருப்ப உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
அளவில் சிறிய, மஞ்சள் நிறமான மஹுவா பூக்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். கிராம மக்கள் அதிகாலையில் சென்று இந்த காட்டுப் பூக்களை சேகரித்து வந்து வீட்டில் உலரவைப்பர். பின் அதை சேமித்து வைத்து வருடம் முழுவதும் பயன்படுத்திக்கொள்வர்.
மஹுவா டோப்ரி ரெசிபி
செய்முறை:
உலர்ந்த மஹுவா பூக்களை முதலில் சுடுதண்ணியிலும், பின் குளிர்ந்த நீரிலும் நன்கு கழுவவேண்டும். சுத்தப்படுத்திய பூக்களை 1-2 மணி நேரம் வேகவைக்க வேண்டும். இடையில் ஊறவைத்த பயறு வகைகளில் ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை மாவு அல்லது அரிசி மாவை தண்ணீர் விட்டுப்பிசைந்து சிறு உருண்டைகளாக்கி வெந்துகொண்டிருக்கும் மஹுவாவுடன் சேர்த்து, சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்க சாரைப் பருப்பு, மக்கானா, உலர் திராட்சை மற்றும் கொப்பரைத் தேங்காய் பவுடர் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். உலர்ந்த மஹுவாவில் இயற்கையாகவே இனிப்புத்தன்மை நிறைந்துள்ளதால், சர்க்கரையோ வெல்லமோ இதில் சேர்ப்பதில்லை. குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்து பின் இறக்கிவிடலாம்.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மக்கள் இதன் சுவைக்காகவும், ஊட்டச்சத்துக்களுக்காகவும் இன்றும் இதை விரும்பி உட்கொண்டு வருகின்றனர்.
வயல் வேலைக்குச் செல்லும் மக்கள் காலையில் மஹுவா டோப்ரி சாப்பிட்டுவிட்டுச் செல்வதால் அவர்களுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கிறது. மறுபடி இரவிலும் இந்த உணவை பாலுடன் சேர்த்து உண் கின்றனர். இவர்கள் இதை ஓர் உணவாக மட்டும் பார்க்காமல், மரபு வழியில் வந்த பாரம்பரியத்தை எதிர்கால தலை முறையினருக்கு எடுத்துரைக்க வேண்டிய நினைவூட்டலாக கருதி கொண்டாடுகின்றனர்.