தென்னிந்தியர்களின் உணவோடு மட்டுமில்லாமல் உணர்வுகளோடும் பின்னிப் பிணைந்த சாம்பார் உருவானக்கதை தெரியுமா? ‘சாம்பார்’ என்பது தமிழ் வார்த்தையான ‘சம்பாரம்’ என்பதிலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி இந்தப் பதிவில் தெளிவாக காண்போம்.
சாம்பார் தென்னிந்தியாவில் உருவாகி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த உணவு என்று சொல்லப் படுகிறது. பருப்புடன் புளிக்கரைச்சலை சேர்த்து செய்யப்படும் சாம்பார் 17ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான சாஜி சத்திரபதி சிவாஜியின் மகனான சம்பாஜிக்கு செய்து கொடுத்த அருமையான உணவுதான் சாம்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒருமுறை சாம்பாஜி தஞ்சைக்கு வருகை புரியும்பொழுது சாஜி தன்னுடைய அரண்மனை சமையற்கூடத்தில் பருப்புடன் புளியை சேர்த்து சமைக்கிறார். அந்த உணவை சாப்பிட்ட சம்பாஜி அது அருமையாக இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இது சம்பாஜிக்கு படைக்கப்பட்ட ஆகாரம். அதனால், சாம்பார் என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.
சாம்பாரை பருப்பு, புளிக்கரைச்சல், காய்கறிகள் சேர்த்து செய்கிறார்கள். கேரளாவில் செய்யப்படும் சாம்பாரில் தேங்காய்ப் பால் சேர்க்கப்படுகிறது. இதை சாதம், தோசை, இட்லி போன்ற உணவுடன் சேர்த்து உண்கிறார்கள்.
சாம்பாருக்கு புற்றுநோயைத் தடுக்கும் தன்மையுள்ளது என்று கூறுவது உண்மையா? என்பதைப்பற்றி பார்க்கலாம். சாம்பாரில் சேர்க்கப்படும் மஞ்சளில் Curcumin உள்ளது. இதற்கு புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. சீரகத்தில் Thymol மற்றும் மிளகில் Piperin என்று ஒன்றுள்ளது. இது இரண்டிற்குமே Cytotoxic properties உள்ளது. இது புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. பூண்டில் Allicin மற்றும் சல்பர் காம்பவுண்ட் நிறைய உள்ளது.
சாம்பாரில் போடப்படும் பருப்பு மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. அதிலும் புற்றுநோயை எதிர்க்கும் தன்மையிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. புளியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. அதனால் சாம்பாருக்கு நேரடியாக கேன்சரை குணமாக்கும் தன்மையில்லை என்றாலும் அதில் உள்ள பொருட்களுக்கு கேன்சரை குணமாக்கக்கூடிய தன்மை உள்ளதாக சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன? சாம்பார் பிரியர்களுக்கு அதை சாப்பிடக் காரணமா வேண்டும்? என்ன நான் சொல்வது சரிதானே?