நம் வாயில் வைத்ததுமே கரையக்கூடிய மைசூர் பாக் தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகைகளுள் ஒன்றாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் மைசூர் பாக்கை அதன் சுவைக்காகவும், தனித்துவத்திற்காகவும் விரும்பி உண்கிறார்கள். அத்தகைய புகழ்பெற்ற ‘மைசூர் பாக்' உருவான கதையை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
‘மைசூர் பாக்’ முதன் முதலில் மைசூர் அரண்மனையில் தான் உருவாக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மகாராஜாவான நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரின் அரண்மனை சமையல்காரர்தான் காகா சாரமதப்பா. உணவு பிரியராக இருந்த இந்த மன்னனுக்கு வித்தியாசமான உணவுகளை சமைத்து அசத்திக் கொண்டிருந்த காகா சாரமதப்பா. ஒருநாள் கடலைமாவு, சர்க்கரை, நெய்யை பயன்படுத்தி ஒரு இனிப்பு பண்டத்தை தயாரிக்கிறார். அந்த இனிப்பை சுவைப்பார்த்த மன்னர் பாராட்டுவது மட்டுமில்லாமல் ‘மைசூர் பாக்கா’ என்ற பெயரையும் வைக்கிறார்.
இந்த மைசூர் பாக்காவின் சுவை மக்களுக்குக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பிய மன்னர் அரண்மனைக்கு அருகிலேயே ஒரு சின்ன கடையை அமைக்கவும் உத்தரவிடுகிறார். அந்த காகா சாரமதப்பா அமைத்த கடைதான் இன்று குரு ஸ்வீட் ஸ்டாலாக மைசூரில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் மைசூருக்கு செல்லும்போது பாரம்பரியமான மைசூர் பாக்கை சுவைக்க வேண்டும் என்று நினைத்தால் சைய்யாஜி ராவ் ரோட்டில் உள்ள குரு ஸ்வீட் மார்ட்டிற்கு சென்று வாங்குங்கள். இந்த கடை சுமார் 85 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தினமும் ஆயிரம் வாடிக்கையாளராவது இந்த கடைக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள்.
மைசூர் பாக் வெறும் இனிப்பு பண்டம் மட்டும் கிடையாது. இது தென்னிந்தியாவின் பாரம்பரியத்தை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. விழாக்கள், திருமணம், பண்டிகை போன்ற சமயங்களில் கட்டாயம் மைசூர் பாக் விருந்தில் பரிமாறப்படும். சில கோவில்களில் மைசூர் பாக் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
காலங்கள் மாற மைசூர் பாக்கிலும் மாறுபாடுகள் வந்துவிட்டது. சாக்லேட் மைசூர் பாக், டிரை ப்ரூட் மைசூர் பாக், பால் மைசூர்பாக் என விதவிதமான மைசூர் பாக்குகள் சந்தையில் வந்துவிட்டது. மைசூர் பாக்கில் சர்க்கரை மற்றும் நெய் பயன்படுத்துவதால் அதிகமான கலோரிகள் கொண்டிருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகமாக நார்ச்சத்தும், புரதமும் இருக்கிறது. நெய் சேர்த்துக் கொள்வதால் செரிமானத்திற்கும் உதவுகிறது.