சாதத்தை குழைவாக போட்டு ‘கமகம’ நெய்யை ஊற்றி பரிமாறப்படும் கர்நாடகா ஸ்பெஷல் பிஸிபேளாபாத் உருவானக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
பிஸிபேளாபாத் என்றால் ‘சூடான பருப்பு சாதம்’ என்று பொருள்படுகிறது. இந்த பகுதியில் பல நூற்றாண்டுகளாக இந்த உணவு செய்யப்பட்டு வருகிறது. பிஸிபேளாபாத் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு உணவு பொருளான ‘கட்டோகரா’ அதாவது உப்பு, அரிசி, நெய் மற்றும் பூண்டு சேர்த்து செய்யப்படும் ஒரு உணவிலிருந்து மருவி வந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மேலும் சிலர் மைசூர் அரண்மனையில் ராஜாக்களுக்கு பராமாறப்படும் உணவு வகையில் எளிமையாக ஜீரணமாகக்கூடிய உணவுப்பட்டியலில் இந்த பிசிபேலேபாத்தும் இடம்பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மைசூர் அரண்மனையில்தான் இந்த பிஸிபேளாபாத்துடன் முந்திரி, கடுகு, பட்டை மற்றும் கொப்பரை தேங்காய் களையும் சேர்த்து சமைக்க ஆரம்பித்துள்ளனர். இந்த உணவுவகை முதன்முதலில் மைசூர் அரண்மனையில் தான் உருவானதாக சொல்லப்படுகிறது. மைசூர் அரண்மனையை விட்டு இந்த உணவு வெளியே வருவதற்கு 100 வருடங்கள் ஆகியிருக்கிறது. பிறகுதான் சாதாரண பாமர மக்களுக்கும் இதன் செய்முறை பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் பிஸிபேளாபாத்தில் எந்த காய்கறிகளும் சேர்க்கப்படுவதில்லை. அதற்கு பதில் காய்கறிகளை இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டிருக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், பிஸிபேளாபாத் கர்நாடகாவின் பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது.
பிஸிபேளாபாத் One pot dish ஆகும். இதை தயாரிக்க அரிசி, பருப்பு, மசாலாக்கள், நெய், புளி, பெருங்காயம், கருவேப்பிலை காய்கறிகள் சேர்த்து செய்யப்படும்போது அதன் மணம், சுவை ஆகியவை இதை சாதாரண கிச்சடியிலிருந்து வேறுபடுத்திக் காட்டும். பிசிபேலேபாத்தை சாதாரணமாகவே சாப்பிடலாம். இருப்பினும், இதனுடன் அப்பளம் மற்றும் ஊறுகாயை தொட்டுக்கொண்டால் சுவை வேற லெவலில் இருக்கும்.
பிஸிபேளாபாத்தில் பருப்பு பயன்படுத்துவதால் அதிகமாக புரதச்சத்து இருக்கிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புரதம் எடுத்துக்கொள்ளும்போது உணவு சாப்பிட்ட முழுதிருப்தி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இது மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்திற்கு நல்லதாகும் மற்றும் இதயநோய், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.