
நாம் பாரம்பரியமாக சமையலை நம் பெற்றோர் அல்லது பாட்டிகளிடமிருந்து கற்றுக்கொண்டு அதை நம் வீட்டிலும் அப்படியே செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. தற்போது, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற பிற மாநில மக்களின் தயாரிப்புகளை ருசிக்கவும், அதே ஸ்டைலில் அந்த உணவுகளை நம் வீட்டில் தயாரிக்கவும் கற்று வருகிறோம்.
மகாராஷ்டிரா உணவுகளை சமைக்க வேண்டுமெனில் இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் ஆறு முக்கியமான பொருட்களை நம் சமையலறை அலமாரியில் கண்டிப்பாக சேமித்து வைத்திருப்பது அவசியம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
பஜ்ரா/ராகி: சிறு தானியம் என்று கூறப்படும் கம்பு மற்றும் கேழ்வரகு மாவில் பக்ரி (Bhakri) போன்ற சப்பாத்தி வகைகளை செய்யலாம். இவற்றிற்கு தொட்டுக்கொள்ள எந்த வகையான சட்னி அல்லது சப்ஜிகளையும் உபயோகிக்கலாம். இத்தானிய வகைகள் ஊட்டச்சத்துக்களுடன் நல்ல சுவையும் தரக்கூடியவை.
பீநட்ஸ் (Peanuts): மிசல் பாவ் மற்றும் தீச்சா (Thecha) போன்ற உணவுகள் கிரன்ச்னஸ் மற்றும் தூக்கலான சுவை பெற பீநட்ஸ் உதவுகின்றன. மேலும் சப்ஜி மற்றும் உலர் சட்னி பவுடர் போன்றவற்றின் தயாரிப்பிலும் பீநட்ஸ் உபயோகப்படுத்தப் படுகின்றன.
பூண்டு: பல வகையான மகாராஷ்டிரா உணவுகளில் ஒரு முக்கிய கூட்டுப் பொருளாக உள்ளது பூண்டு. லசூன் (Lasoon) போன்ற சட்னி வகைகள், கறி வகைகள், பருப்பு வகைகள் போன்ற உணவுகளுக்கு மசாலா தயாரிக்கும்போது பூண்டு ஒரு முக்கிய அங்கம் வகிக்கும். பூண்டை பச்சையாகவோ அல்லது ரோஸ்ட் செய்தோ உணவுகளில் சேர்ப்பது அந்த உணவுக்கு போலியற்ற நம்பகமான சுவை கொடுக்கும் என்பது உண்மை.
கடலைமாவு (Besan): பல வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க உதவுவது கடலைமாவு. சுன்கா (Zunka) மற்றும் கொதிம்பிர் வாடி (kothimbir vadi) போன்ற உயர்தரமான உணவுகளுக்கு அடிப்படையான முக்கிய கூட்டுப்பொருளே கடலைமாவுதான்.
கோடா மசாலா: கோடா மசாலா என்பது தனியா, தேங்காய் பூ, கச கசா, எள், சீரகம், பெருஞ்சீரகம் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படும் ஒரு ஸ்பெஷல் மசாலா பவுடர் ஆகும். இது மசாலே பாத் (Masale Bhat) மற்றும் ஸ்டஃப்ட் கத்திரிக்கா கறி போன்ற உணவுகளில் சுவையும் மணமும் கூட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது.
கோக்கும்: கறி வகைகள், பருப்பு வகை உணவுகள் மற்றும் வெயில் காலத்தில் புத்துணர்ச்சி பெறுவதற்காக அருந்தப்படும் சொல்காதி (Sol Kadhi) என்றொரு வகை பானம் போன்ற உணவுகளில், புளிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் அடர் பர்பிள் நிறம் கொண்ட பழம் இது. உடலுக்கு குளிர்ச்சியும் தரக்கூடியது இது.
மகாராஷ்டிரால் உணவுகளை அதன் உண்மையான சுவை குன்றாமல் தயாரிக்க நம் வீட்டு கிச்சனில் மேலே கூறிய 6 வகைப் பொருட்களையும் சேமிப்பில் வைப்பது அவசியம்.