
காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப்போகிறீர்களா? கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்ட பின், காய்கறிகளை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.
கேரட், பீட்ரூட் வாடிப்போனால் நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிதுநேரம் போட்டு வைத்தால் ஃப்ரெஷ் ஆகிவிடும். நறுக்குவதும் எளிதாக இருக்கும்.
சமையல் செய்யும்போது கொதிக்கும் எண்ணெய் பட்டால், தாமதம் செய்யாமல் அந்தப்பகுதியில் அரிசி மாவைத் தடவியோ, பூசியோவிட்டால் தீக்காயம் நீர்கோர்த்து புண்ணாகாமல் அமுங்கிவிடும். எரிச்சலும் ஏற்படாது.
தேங்காயை உடைத்ததும் கண் உள்ள பாகத்தை முதலில் உபயோகித்து விடவேண்டும். ஏனெனில் அந்தப்பகுதிதான் விரைவில் கெட்டுப் போகும்.
குக்கருக்குள் வைத்து சமைப்பதற்கென்று பிரத்யேக அலுமினியப்பாத்திரங்கள், குக்கருடன் சேர்த்தே தரப்படுவதுண்டு. இவற்றை பலரும் பெரும்பாலும் உபயோகப்படுத்துவதில்லை. இந்தப் பாத்திரங்களைக்கடையில் கொடுத்தால் சீராக துளை போட்டுக் கொடுப்பார்கள். அதனை காய்கறி வடிதட்டாக பயன்படுத்தலாம்.
கத்தியை சூடாக்கி பிரெட்டை வெட்டினால் பிசிறு இல்லாமல் விரும்பியபடி வெட்டலாம்.
சமையலறையில் பயன்படுத்தும் கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப்படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? கண்ணாடி பாட்டில்களில் எலுமிச்சைப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பாதிக்கு மேல் தண்ணீர்விட்டுக் குலுக்கினால் கறைகள் நீங்கி சுத்தமாகிவிடும்.
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால், தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாது.
உணவுப் பொருட்கள், எண்ணெய் பிசுக்கு என கேஸ் அடுப்பு அழுக்காக இருக்கிறதா? சிறிதளவு நீரில் ஒரு ஸ்பூன் உப்பைக் கலந்து, அதில் ஒரு துண்டு செய்தித்தாளை முக்கி எடுத்து கேஸ் அடுப்பின் மேலே தடவுங்கள். சில வினாடிகள் கழித்து ஒரு உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்தால் கேஸ் அடுப்பு " பளிச்"சென்று மாறிவிடும்.
கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது சீக்கிரமே அழுகி விடுகிறதா? கவலைவேண்டாம். அவற்றை ஈரமில்லாமல் ஒரு செய்தித்தாளில் சுற்றி, கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். பத்து நாட்களானாலும் அழுகாமல் அப்படியே பசுமையுடன் இருக்கும்.
தோசைக்கல் பிசுபிசுப்பாக இருந்தால், சூடான தோசைக்கல்லில் சிறிது புளித்த மோரும், உப்பும் தடவித் தேய்த்தால் தோசைக்கல் "பளிச்" சென்று ஆகிவிடும்.
சமையலறையில் பயன்படுத்தும் எண்ணெய்ப் பாத்திரங்களில் பிசுக்கும், பிசுக்கு வாடையும் போகவேண்டுமானால், சீகைக்காய் பொடியால் முதலில் தேய்த்துக் கழுவிவிட்டு, பின்னர் எலுமிச்சைப் பழத்தோல் பொடியைக் கொண்டுத் தேய்த்துக் கழுவவேண்டும்.