
காலிஃப்ளவர் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
காலிபிளவர் -ஒன்று
கடலை மாவு, மைதா தலா- இரண்டு கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மிளகு, ஏலக்காய், கிராம்பு எல்லாமாக சேர்த்து அரைத்த பேஸ்ட் -ஒரு டேபிள் ஸ்பூன்
தனி மிளகாய் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ்- ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி -கால் டீஸ்பூன்
உப்பு எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்த சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் வெந்நீரில் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து இரண்டு நிமிடம் போட்டு எடுக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த பேஸ்ட், மாவு வகைகள், உப்பு, மிளகாய்ப் பொடி, சாஸ் எல்லா வற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாக கலந்து அதில் காலிபிளவர் துண்டங்களை சேர்த்து நன்றாக புரட்டி சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் ஐந்தாறு துண்டுகளாக எண்ணெயில் போட்டு பொரித்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். மிகவும் ருசிகரமான இந்த வறுவலை பிஸிபேலாபாத் முதல் அனைத்து வகையான சாத வகைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
புதினா சப்பாத்தி:
செய்யத் தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -ஒரு கப்,
புதினா இலைகள்- இரண்டு கைப்பிடி
மிளகு, சீரகப் பொடி- ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் -ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக சுற்றி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இதனுடன் உப்பு, மிளகு, சீரகத்தூள், பச்சை மிளகாய் விழுது மற்றும் கோதுமை மாவை சேர்த்து எண்ணெய்விட்டு தேவையான அளவு நீர்விட்டு பிசைந்து வைக்கவும்.
சப்பாத்தி தவாவை அடுப்பில் வைத்து, மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி வர மைதா மாவில் புரட்டி நன்றாகத் தேய்த்து தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து வைக்கவும். விருப்பப்பட்ட சப்ஜியுடன் சாப்பிடலாம் ருசியாக இருக்கும். சப்ஜி இல்லை என்றால் பூந்தி ரைத்தாவுடன் சாப்பிடலாம்.
சப்பாத்தி தேய்க்கும்பொழுது வர கோதுமை மாவில் புரட்டி தேய்ப்பதை விட வர மைதா மாவில் புரட்டி தேய்த்தால் சப்பாத்தி கல்லில் ஒட்டாமல் தேய்க்கலாம்.