
விருந்துகளில் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என்று சாப்பிட்டுக் கொண்டு வரும்போது வடை பாயசம் அப்பளம் சாப்பிட்ட பிறகுதான் தயிர் சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதனால் கடைசியில் சாப்பிட யத்தனிப்போம்.
ஆனால் நாம் சிறுவர்களாக இருந்த பொழுது அதை பின்பற்ற ஆசைப்பட மாட்டோம். சாத வகைகளை முதலில் முடித்துவிட்டு இனிப்பை கடைசியாக ருசிக்க தான் ஆசைப்படுவோம். அப்படி தயிர் சாதத்தை கடைசியாக சாப்பிட சொல்வதன் காரணம் என்ன என்பதை பதிவில் காண்போம்.
நெய் சேர்த்து உண்பதால் ஏற்படும் நன்மைகள்: பகல் பொழுதில் உண்ணும் உணவின் முதல் சாதத்தில் சிறிது அளவு நெய் சேர்த்து உண்பதால் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல், பித்தாதிக்கம், கழுத்து வலி, வாத, கப, நோய்கள், தீராத சொறி முதலியவை நீங்கும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.
மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலநோய், இரத்த வாந்தி நிற்கும். சருமம் பளபளக்கும். அழகு உண்டாகும். கண்களுக்கு பலத்தை கொடுக்கும். பெருவயிறு, நீர் கோவை, பேதி, குன்மம், முறை சுரம் முதலிய நோய் கண்டவர்கள் நெய்யை ஒதுக்கவேண்டும்.
துவையல்: அதிகம் புளி சேர்த்த துவையல் ரத்தத்தை கெடுக்கும். சிறிதளவு புளியோ அல்லது புளி, சேர்க்காமல் புளியாரை இலை அல்லது நெல்லிக்காய் போன்றவற்றால் அரைத்த துவையல் பித்தத்தை தணிக்கும்.
குழம்பு: நீர்க்க வைத்த குழம்பே உடலுக்கு ஏற்றது என பண்டைய சித்தர் நூலில் கூறப்பட்டுள்ளது.
பருப்பு சாதம்: குறிஞ்சி நிலம் எனப்படும் மலைப் பிரதேசங்களில் விளையும் மலைத் துவரை மிகவும் விசேஷமாகும். வெந்து மலர்ந்துள்ள துவரம் பருப்பை சூட்டுடன் சிறிது உப்பிட்டு கடைந்து சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கடைந்த பருப்பை போட்டு சாப்பிட ஒரு பிடி சோத்துக்கு ஒரு பிடி சதை வளரும் என சித்தர் நூலில் கூறப்பட்டுள்ளது.
பருப்பு ரசம்: வேகவைத்த துவரம் பருப்பின் நீரை இறுத்து அதில் புளி தண்ணீர் மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை முதலியன போட்டு ரசம் வைத்து சாதத்துடன் சாப்பிட ஜீரண சக்தி மிகும்.
தயிர் சாதம்: சாப்பிடும்போது குழம்பு, ரசம் என்று சாப்பிட்டு கடைசியில் உப்பு சேர்த்த தயிர் சாதம் சாப்பிட, அதுக்கு முன் சாப்பிட்டு இரைப்பையில் இறங்கி இருக்கும் உணவு பொருட்களை புழுங்க செய்து சீரணமாக்குவதோடு இல்லாமல் அதற்கு முன் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் உள்ள வாத, பித்த, கபதோஷங்கள் அனைத்தையும் நீக்கிவிடும். இதனால்தான் கடைசியாக தயிர்சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.