
நாம் சமைக்கும் உணவுகளில் உப்பின் அளவை சமநிலையில் அல்லது சிறிதளவு குறைத்து சேர்த்து சமைத்துவிட்டால் அதில் தவறேதும் இல்லை. உப்பின் அளவு அதிகமாகிவிட்டால் அதை சாப்பிடவும் முடியாது. உடல் ஆரோக்கியத்திற்கும் அது கேடு விளைவிக்கும். தவறுதலாக உணவில் உப்பின் அளவு அதிகமாகிவிட்டால் அதைக் குறைப்பதற்கான ஆறு டிப்ஸ்களை இப்பதிவில் பார்க்கலாம்.
உப்பு சேர்க்காத கொதி நீர், காய்கறி வேகவைத்த தண்ணீர் போன்றவற்றை உப்பு அதிகமாய் சேர்ந்துள்ள சாம்பார், ரசம், கூட்டு, குழம்பு ஆகியவற்றோடு சேர்த்து சிறிது நீர்க்கச் செய்துவிட்டால் உப்பு சுவை குறைந்து விடும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி உப்பு அதிகமாய் உள்ள உணவில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் சமைத்தால் அதிகப்படியான உப்பை உருளைக்கிழங்கு தனக்குள் உறிஞ்சிக் கொள்ளும். உணவைப் பரிமாறுவதற்கு முன் உருளைக் கிழங்கை வெளியில் எடுத்துவிடலாம்.
பதப்படுத்தப்படாத மற்றும் ஃபிரீஸாகாத, ஃபிரஷ் காய்கறிகளை நறுக்கி உப்பு சேர்க்காமல், உப்பு அதிகமாகிவிட்ட உணவுடன் சேர்த்து சமைத்தால் உப்பின் அளவு சமநிலைப்பட்டுவிடும்.
கிரீமி சூப், சாலட், பச்சடி போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிடும்போது மேலும் சிறிது கிரீம், தயிர் போன்றவற்றை சேர்த்து உப்பு சுவையை சரி பண்ணிவிடலாம்.
உப்பு அதிகம் உள்ள உணவில் சிறிது லெமன் ஜூஸ் அல்லது வினிகர் போன்றவற்றை சேர்க்கும்போது அவற்றிலுள்ள அமிலத்தன்மையும் சுவையும் உப்பின் ருசியைக் குறைத்துவிடும்.
பீன்ஸ், மாமிசம், வெஜிடபிள்ஸ் போன்றவைகளை மற்ற பொருள்களுடன் சேர்த்து சமைக்க ஆரம்பிக்கும் முன்பு அவற்றை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்தால் அவற்றின் மேற்பரப்பில் உள்ள உப்பு சத்து கரைந்து விடும். அதனால் சமைக்கும் உணவில் சேரும் உப்பின் அளவு குறையும்.
சூப், குழம்பு வகைகளில் உப்பு சற்று அதிகமானால் கூடுதலாக சற்று தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சேர்ப்பதால் உப்பின் சுவை சற்று குறையும். உங்கள் சமையல் ரெசிபிகளில் குறைந்த சோடியம் நிறைந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும், எனவே உப்பின் அளவை நீங்களே கட்டுப்படுத்தலாம்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அதிகமாகிவிட்ட உப்பின் அளவைக் குறைப்போம். உடல் நலம் காப்போம்.